பகல் நேரத்திலேயே ஆடுகளை தூக்கிச் செல்லும் சிறுத்தைகள்: பரிதவிக்கும் அய்யம்பதி பழங்குடி மக்கள்

பகல் நேரத்திலேயே ஆடுகளை தூக்கிச் செல்லும் சிறுத்தைகள்: பரிதவிக்கும் அய்யம்பதி பழங்குடி மக்கள்
Updated on
2 min read

கோவை-பாலக்காடு சாலையில் க.க.சாவடி அருகே உள்ளது அய்யம்பதி பழங்குடியினர் கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகளில் ஒன்றான அய்யசாமி மலையின் பின்புறம் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் 42 வீடுகள் உள்ளன. அதில் 80-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை, விலங்குகள் பயத்துடன் வாழ வேண்டாம். கீழே வந்தால் குடியிருப்பு வசதியும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்றுகூறி அதிகாரிகள் அழைத்துவந்துள்ளனர். பின்னர் 32 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. சில வருடங்களில் பெரும்பாலான வீடுகள் இடிந்து விட்டன. பெரிய அளவில் தொழில் வசதியும் செய்துதரவில்லை.

இதனால், கூலி வேலைக்குச் சென்றும், ஆடு மாடு மேய்த்தும் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த ஆண்டு 20 புதிய வீடுகள் கட்டித்தர அரசு நிதி ஒதுக்கி, அந்தப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், கடந்த 3 மாதங்களாக சிறுத்தை தொல்லையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இரு மாதங்களுக்கு முன் இப்பகுதியைச் சேர்ந்த ரங்காத்தாள்- வெங்கடேஷ் தம்பதியின் 3 ஆடுகளையும், ஒரு மாதம் முன்பு சின்னசாமி-மாரியம்மாள் தம்பதியின் 3 ஆடுகளையும், ஒரு வாரம் முன்பு சண்முகத்தின் ஆட்டையும் சிறுத்தை பிடித்துச் சென்றுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சிறுத்தை பிடித்துச் சென்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆடு மேய்பவர்களின் எதிரிலேயே சிறுத்தை ஆடுகளை தூக்கிச் சென்றதாகவும், சிறுத்தைகளிடம் சிக்கிய சில ஆடுகள் காயத்துடன் தப்பி வந்துள்ளதாகவும் இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்

அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் கூறும்போது, “ஒரு நாள் மேய்ச்சலுக்குச் சென்றபோது, பிற்பகலில் ஒரு சிறுத்தை பதுங்கியபடி வந்தது. திடீரென ஆட்டுக் கூட்டத்தில் புகுந்த சிறுத்தை, ஒரு குட்டியை தூக்கிச் சென்றது” என்றார்.

ஆடு மேய்க்கும் சண்முகம் கூறும்போது, “என்னிடம் தற்போது 5 ஆடுகள்தான் உள்ளன. சிறுத்தை தொந்தரவால் ஒவ்வொன்றாக விற்று வருகிறேன். பலமுறை ஆட்டுக் கூட்டத்தில் நுழைந்த சிறுத்தையை நான் துரத்தியுள்ளேன். பட்டப் பகலிலேயே ஆடுகளை சிறுத்தை தூக்கிச் செல்கிறது” என்றார்.

சின்னசாமி-மாரியம்மாள் கூறும்போது, “ஒரு மாதத்துக்கு முன் ஆட்டுக் கூட்டத்தில் புகுந்த சிறுத்தை ஒரு குட்டியை தூக்கிச் சென்றுவிட்டது. அதை துரத்திச் சென்றும், குட்டியை மீட்க முடியவில்லை. பின்னர், இதேபோல 2 ஆடுகளை சிறுத்தை கவ்விச் சென்றுவிட்டது. இதனால், முன்புபோல 5 மைல் தூரத்துக்கு ஆடு மேய்க்கச் செல்வதில்லை. ஒரு பர்லாங் தொலைவுடனேயே மேய்ச்சலை முடித்துக் கொள்கிறோம். தீவனம் கிடைக்காததால் காட்டில் முள்செடிகளை வெட்டிவந்து பட்டியில போடுகிறோம்” என்றார்.

உட்கண்டி தோட்டம் வாழைப்படுகையைச் சேர்ந்த தங்கராஜ்- ருக்குமணி கூறும்போது, “இரு மாதங்களில் 12 பெரிய ஆடுகளை சிறுத்தை கவ்விச் சென்றது.

ஒரு பெண் ஆடு 4 முறை சிறுத்தையிடம் பிடிபட்டு, காயத்துடன் தப்பி வந்துள்ளது. சிறுத்தை அதன் ரத்தத்தை உறிஞ்சியதில், தற்போது நோஞ்சான்போல காட்சியளிக்கிறது. அடுத்த தோட்டத்துக்காரருடைய பெரிய பட்டியில் 15 ஆடுகளை சிறுத்தை தூக்கிச் சென்றுவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் எப்படி வாழ்வது?” என்றனர்.

இவர்கள் 3 மாதங்களுக்கு முன்புவரை குடிசைக்கு 50 அடி தொலைவில் ஆட்டுப்பட்டி அமைத்திருந்தனர். ஆனால், சிறுத்தை தொந்தரவால், வீட்டின் வாயிலிலேயே பட்டியை மாற்றிக்கொண்டு, இருவரும் காவலுக்காக படுத்துக் கொள்கின்றனராம். சிறுத்தை வந்தால் தடியால் அடித்தும், பட்டாசு வெடித்தும் துரத்தியுள்ளனர்.

இப்பகுதி பழங்குடியினர் சங்கத் தலைவர் சண்முகம் கூறும்போது, “பழங்குடியினர் குடியிருப்புகளில் போதிய பாதுகாப்பு கிடையாது. யானைகள் அடிக்கடி வந்தாலும், அவற்றால் பெரிய தொந்தரவு இல்லை. கடந்த 6 மாதங்கள் முன்புவரை சிறுத்தை இப்பகுதிக்கு வந்தது. தற்போதுதான் குட்டிகளுடன் பல சிறுத்தைகள் தென்படுவதாகக் கூறுகின்றனர். எனவே, அவற்றைப் பிடித்துச் சென்று அடர்ந்த வனத்தில் விடவேண்டும். மேலும், ஊருக்குள் மின்சார விளக்கு வெளிச்சம் இருந்தால் சிறுத்தைகள் உள்ளிட்ட மிருகங்கள் வராது. எனவே, இந்தக் குடியிருப்புப் பகுதியில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும். ஆடுகளை நம்பிப் பிழைக்கும் இந்த மக்களுக்கு உரிய நஷ்டஈட்டை வனத் துறை வழங்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in