Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM

விஜயகாந்த்துக்கு வலைவீசுவது ஏன்? - வாக்கு வங்கியை கணக்கு போடும் அரசியல் கட்சிகள்!

கருணாநிதி காத்துக்கிடக்கிறார். வாசன் தேடிவந்து வாழ்த்துகிறார். தாமரைத் தலைவர்களும் தவம் கிடக்கிறார்கள். மொத்தத்தில் விஜயகாந்த் காட்டில் கனமழை! ஒருகாலத்தில் மூப்பனாருக்கு கிடைத்த வரவேற்பையும், 2000-களின் தொடக்கங்களில் ராமதாஸுக்கு இருந்த செல்வாக் கையும் இன்று விஜய காந்துக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப் பாட்டுக்கு ஈடாக ஒப்பிடலாம். அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

ஏனெனில், விஜயகாந்துக்கான வாக்கு வங்கி அப்படி. கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிரடியாக, தனித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டார் விஜயகாந்த். அத்தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மட்டுமே விஜயகாந்த் வெற்றி பெற்றார். ஆனாலும், அத்தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற மொத்த வாக்குகள் 8 சதவீதம்.

தொடர்ந்து 2009 நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதி களிலும் தனித்தே போட்டியிட்ட அக்கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது சட்டசபை தேர்தலைக் காட்டிலும் அக் கட்சிக்கு வளர்ச்சிதான்.

முதல் கூட்டணி!

மேற்கண்ட இரு தேர்தல்களிலும் தனித்து நின்று வீரம் காட்டிய தேமுதிக, 2011ல் இறங்கிவந்தது. அப்போது சட்டசபை தேர்தலில் திமுக எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக அதிமுக.வுடன் கூட்டணி சேர்ந்தது அக்கட்சி. நியாயமான கணக்குபடி அன்றைக்கு தேமுதிக-வுக்கு இருந்த 10 சதவீத வாக்கு வங்கிக்கு மொத்த தொகுதிகளின் அடிப்படையில் 54 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி தனக்கு கிடைத்த 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அந்த ஆண்டே நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெயலலிதாவுடனான கூட்டணி முறிந்து, மீண்டும் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி 10 சதவீத வாக்குகளை பெற்றது. கிட்டதட்ட 10 சதவீத வாக்குகளே தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் - இன்றைய சூழலில் - மற்ற எந்தக் கட்சிகளையும்விட தேமுதிக-திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு தேவையாக இருக்கிறது.

திமுக-வுக்கு ஏன் தேவை?

கடந்த 2006 சட்டசபை தேர்தலின் போதும், 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தேமுதிக தனித்து போட்டியிட்டபோது திமுக-வே வெற்றி பெற்றது. காரணம், தேமுதிக பிரித்த வாக்கு கள் திமுக-வுக்கு சாதகமாக அமைந்தன. இச்சூழலில் 2011-ல் திமுக-வை தோற்கடிக்க, அதிமுக-வுக்கு விஜயகாந்த்தின் தேவை ஏற்பட்டது. அந்த நோக்கமும் நிறைவேறியது. அதுபோலவே, இம்முறை தனது நேரடி எதிரியான அதிமுக-வை தோற்கடிக்க திமுக-வுக்கு விஜயகாந்த் தேவைப்படுகிறார்.

உண்மையைச் சொல்லப் போனால் இன்றைய சூழலில் திமுக-வுக்கு விஜயகாந்த்தை விட்டால் வேறு வழியும் இல்லை. ஏனெனில் காங்கிரஸ், மதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் அணியில் இல்லை என்று முடிவாகிவிட்ட சூழலில் பாக்கி இருப்பது தேமுதிக மட்டுமே. மேலும் மேற்கண்ட கட்சிகளைவிட தேமுதிக-வின் வாக்கு வங்கி அதிகம்.

இன்று பொதுக்குழு என்னவாகும்?

திமுக-வுடன் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தைகள் சுமுகமாகவே போய்க்கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் திமுக-வுடன் தேமுதிக கூட்டணி வைத்துக்கொள்ளும். ஆனால், இன்றைய பொதுக்குழுவில் அதனை அக்கட்சி வெளியிடாது. ஏனெனில், திமுக தரப்பில் ஒன்பது தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரைக்கும் இறங்கி வந்திருக்கிறார்கள். இதில் விஜயகாந்துக்கு ஒப்புதல் என்றாலும் காத்திருந்தால் கூடுதலாக கிடைத்தாலும் லாபம்தானே என்று கருதுகிறார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x