

மத்திய, மாநில அரசுகளால் அனுமதிக்கப்பட்ட தனியார் மின் உற்பத்தி திட்டங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றாதது தான், தமிழகத்தின் மின் தட்டுப்பாடுக்கு காரணம் என்று இந்திய மின் தொடரமைப்புக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 2 மணி நேரமாக இருந்த மின் வெட்டு நேரம், கடந்த மூன்றாண்டுகளில் படிப்படியாக உயர்ந்து, தற்போது மாவட்டங்களில் எட்டு முதல் 10 மணி நேரமாக அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கலாம் என்றால், அதற்கு தேவையான மின் தொடரமைப்பு பாதை இல்லை என்று மின்துறை தெரிவித்துள்ளது. வட – தென் மாநிலங்களை இணைப்பதற்கான மின் தொடரமைப்பு பாதைகள் அமைக்காதது குறித்து, மின் தொடரமைப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து, மின் தொடரமைப்புக் கழக, தென் மாநிலங்களுக்கான செயல் இயக்குனர் என்.ரவிக்குமார், ’தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மட்டும், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில், தனியார் மின் திட்டங்கள் அமைக்க, 2007ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்தன. இந்த திட்டங்கள் வந்தால், 17,140 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தியாகியிருக்கும். பல்வேறு காரணங்களால், இந்த் பாரத் மற்றும் கோஸ்டல் ஜென் நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள், ஐந்தாண்டுகளாகியும் பணிகளைத் துவங்கவில்லை. இந்த திட்டங்கள் வந்தால் தமிழகத்திலிருந்துதான் மின்சாரம் ஏற்றுமதியாகும் என்று நினைத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். நிலைமை வேறு விதமாக மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழக மின் துறை அதிகாரிகளிடம் தனியார் நிறுவனங்கள் பல் வேறு காரணங்களைத் தெரிவித்துள்ளன. கடலோர மாவட்டங்களில் உள்ளூர் பிரச்சினைகளாலும், பல்வேறு தரப்பின் எதிர்ப்புகளாலும், கடல்சார் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை. மின்சாரத்தை விற்பதற்கான ஒப்பந்தங்கள் செய்ய முடியவில்லை எனத் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.