

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் தொழில்நுட்ப கல்விக்கு உயரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொழில்நுட்பக் கல்விக்கென அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் செயல்பாட்டினை கண்காணிக்க, நிர்வாக வசதிக்காக திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்,திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாணைக்கிணங்க, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு மாறிவரும் விஞ்ஞான சூழலுக்கு ஏற்ப உலகத் தரத்திற்கு ஏற்றவாறு உரிய நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல அலுவலகங்களுக்கான கல்வி சார்ந்த கட்டடங்கள் கட்ட தலா 30 கோடி ரூபாய், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மண்டல மையங்களில் மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டடங்கள் கட்ட தலா 10 கோடி ரூபாய், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் 2
ஆகிய இடங்களிலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டடங்கள் கட்ட தலா 10 கோடி ரூபாய், பட்டுக்கோட்டை மற்றும் பண்ருட்டி ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் விடுதி கட்டடங்கள் கட்ட தலா 5 கோடி ரூபாய், ஆரணி, காஞ்சிபுரம், விழுப்புரம், திண்டிவனம், தூத்துக்குடி, நாகர்கோவில், ராமநாதபுரம், திண்டுக்கல், பண்ருட்டி, திருக்குவளை, பட்டுக்கோட்டை, அரியலூர் ஆகிய 12 இடங்களிலுள்ளஅண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் மின்வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்த
10 கோடி ரூபாய் என மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.