Published : 15 Jun 2017 09:25 AM
Last Updated : 15 Jun 2017 09:25 AM

பெண்ணை தாக்கிய ஏடிஎஸ்பி-க்கு பதவி உயர்வு: சாமளாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு- டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சிப்பதாகவும் புகார்

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் டாஸ்மாக் போராட்டத்தில், பெண்ணை தாக்கிய ஏடிஎஸ்பி ஆர்.பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு போராட்டக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பதவி உயர்வைக் கண்டித்து மீண்டும் போராட உள்ளதாகத் கூறினர்.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் ஏப்.11-ம் தேதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருப்பூர் ஏடிஎஸ்பியாக இருந்த ஆர்.பாண்டியராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட சாமளாபுரம் அய்யம்பாளை யத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை ஓங்கி அறைந்தார். இதில், தனது செவித்திறன் குறைந்ததாக அந்த பெண் குற்றம்சாட்டினார்.

இச்சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஏடிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்நிலையில், ஆர்.பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான தெ.பிரபா கரன் கூறியதாவது: எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பொது சொத்தை சேதப்படுத்தியதாக பொய் வழக்கு போட்டனர். ஏப்.12-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் மற்றொரு ஏடிஎஸ்பியான ஸ்டாலின், வழக்கு ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார். பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை அனைத்தும் கண்துடைப்பாகவே நடந்து முடிந்தது.

எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால், அவரது பதவி உயர்வை நிறுத்தி வைத்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதைக் கண்டித்து மீண்டும் சாமளாபுரத்தில் போராட்டத்தை தொடர்வோம் என்றார்.

போராட்டத்தில் அப்போது ஈடுபட்ட தவமணி என்ற பெண் கூறியதாவது: அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது, எங்கள் கிராம மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்றும் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், நீதிமன்ற உத்தரவை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இந்நிலையில் மீண்டும் எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான வேலைகள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x