

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகத்தை முதல்வர் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைப்பார் என சட்டப்பேரவையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, குளச்சல் மீன்பிடித் துறைமுகம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "குளச்சல் மீன்பிடித் துறைமுகப் பணிகளுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தத் துறைமுகத்தை முதல்வர் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைப்பார்" என்றார்.
இதேபோல் பூம்புகார் தொகுதி தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து அந்தத் தொகுதி உறுப்பினர் பவுன்ராஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகத்துக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கிட்டுக்கு பின்னர் பணிகள் தொடங்கும் எனக் கூறினார்.