

மின்வாரிய புகார் மையத்தில் குறைந்த அளவே ஊழியர்கள் உள்ளதால் மின்தடைகள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வீடுகள், தொழிற்சாலைகளில் மின்தடை ஏற்பட்டால் அது குறித்து புகார் தெரிவிக்க 1912 என்ற தொலைபேசி எண்ணை மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்த எண்ணில் நுகர்வோர்கள் தெரிவிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட மின்தடை நீக்க பிரிவு அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு பழுது நீக்கப்படும்.
தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் இந்தப் புகார் மையத்தை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும், பல நேரங்களில் இந்த தொலைபேசி எண் பிசியாகவே உள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது கணினி மைய புகார் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அத்துடன் ஊழியர் எண்ணிக்கையும் குறைந்த அளவே உள்ளது. இதனால் நுகர்வோர் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது என்றனர்.
கோடைக்காலத்தில் மின்தடை குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என நுகர்வோர்கள் எதிர்பார்க்கின்றனர்.