

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டப்பேரவை வைர விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94-வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றியுரையாற்றுகிறார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
சட்டப்பேரவை வடிவ மேடை
கருணாநிதி சட்டப்பேரவை வைர விழாவுக்காக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சட்டப்பேரவை வடிவில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு எதிரே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முதல் ராயப்பேட்டை வரையிலும், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதியை வாழ்த்தி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கும் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா, சரத்பவார், வி.நாராயணசாமி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களை வரவேற்று மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர்.
விழாவுக்கு வருகை தரும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக www.wishthalaivar.com என்ற இணைதளம் கடந்த 30-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள் அல்லாத கட்சியின் தலைவர்கள் ஒரே மேடையில் அணி வகுப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தவும், வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கவும் அடித்தளமாக அமையும் எனக் கூறப்படுகிறது.