

மாம்பலம் ரயில் நிலையம் பகுதியில் ஸ்கூட்டி வாகனங்களை திருடிவந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாம்பலம் ரயில் நிலையம் முன்பதிவு மையத் துக்கு வருபவர்களின் ஸ்கூட்டி வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டன. மற்ற மோட்டார் சைக்கிள்கள் அப்படியே இருக்கும் நிலையில் ஸ்கூட்டி வண்டிகள் மட்டும் தொடர்ந்து திருடப்பட்டது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த திருட்டில் ஈடுபடும் நபரை பிடிக்க உதவி ஆய்வாளர் தாசையன், போலீஸ்காரர்கள் ராஜாராம், ராமச்சந்திரன், சுரேஷ், துரைப்பாண்டி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
ஸ்கூட்டி திருடனை பிடிக்க தனிப்படை போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாரே ஒரு ஸ்கூட்டி வண்டியை பெண் ஒருவர் மூலம் ஓட்டிவரச்செய்து, மாம்பலம் ரயில் நிலையம் அருகே நிறுத்தச் சொல்லி கண்காணித்து வந்தனர்.இதேபோல 3 நாட்கள் செய்தும் பலனில்லை.
4-வது நாளான நேற்று காலையிலும் ஸ்கூட்டியை நிறுத்தி போலீஸார் காத்திருந்த நிலையில் அதை திருட முயற்சி செய்தவரை பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ஹரிகிருஷ்ணன்(45), தேனாம்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து 10 ஸ்கூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 'ஸ்கூட்டி வண்டிகளை குறைந்த விலைக்கு அதிகம் பேர் வாங்குவதால் அதை மட்டும் குறிவைத்து திருடியதாக' போலீஸாரிடம் கூறியிருக்கிறார் ஹரிகிருஷ்ணன்