

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 செல் போன்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
கோடம்பாக்கம் நெடுஞ்சாலை - சீரணிபுரம் சந்திப்பில், சென்னை பாண்டிபஜார் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலை மையில் போலீஸார், நேற்று முன்தினம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் சில செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது,
கெருகம்பாக்கத்தை சேர்ந்த இம்தியாஸ் அகமது (26), அவரது தம்பி ஆசிப் அகமது என்பது தெரிந்தது. தனியாகச் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது, செல்போன்களைப் பறித்து விற்பனை செய்வதை தொழிலாக செய்துள்ளனர். இருவரையும் போலீ ஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்றரை பவுன் தாலிச்செயின், 35 செல்போன்கள், குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பயணிகளிடம் திருடுபவர்கள்
கோயம்பேடு போலீஸார் பேருந்து நிலையத்தில் கண் காணிப்பு பணியிலிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 5 நபர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் பயணிகளிடம் திருடுபவர்கள் என்றும் அவர்கள் ஆந்திர மாநிலத் தைச் சேர்ந்த வெங்கடேஷ்(26), சுப்பன்(32), சாயன்ரமேஷ்(25), செந்து(25), அகில்(25) என்பதும் தெரிந்தது. உடனே 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, ஆயுதப்படை போலீஸ்காரர் வீரமணிகண்டபழனி, மெரினா, விவேகானந்தர் இல்லம் எதிரிலுள்ள கடற்கரைப் பகுதியில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வீரமணிகண்டபழனியைக் கையால் தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார். சுதாரித்து கொண்ட வீரமணிகண்டபழனி கூச்சலிட அருகில் ரோந்துப் பணியிலிருந்த மெரினா காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ், இரண்டாம் நிலைக்காவலர் கோவிந்தராஜ் அந்த நபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் பிடிப்பட்ட நபர் திருவல்லிக்கேணி அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த சுமேஷ்(22) என்பது தெரிந்தது.
கொள்ளையனுக்கு தர்மஅடி
சென்னை மயிலாப்பூர் சன்னதி தெருவில் நடந்து சென்ற சரஸ்வதி(35) என்ற பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செயின் பறிக்க முயன்றனர். அதில் ஒருவரை சரஸ்வதி மடக்கிப்பிடித்து கூச்சலிட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர். மயிலாப்பூர் போலீஸார் விரைந்து வந்து, அந்த நபரைக் கைது செய்து நடத்திய விசாரணையில் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிந்தது.