விருதுநகரில் கண்மாயில் மூழ்கி 5 சிறுமிகள் பலி

விருதுநகரில் கண்மாயில் மூழ்கி 5 சிறுமிகள் பலி
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நீச்சல் பழகியபோது கண்மாயில் மூழ்கி 2 சகோதரிகள் உள்ளிட்ட 5 சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

திருச்சுழி அருகேயுள்ள போத்தம்பட்டியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் ராமநாயக்கர் கண்மாய் உள்ளது. இதில் போத்தம்பட்டியைச் சேர்ந்த சிறுமிகள் 7 பேர் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, முருகன் என்பவரது இளைய மகள் ரம்யா (11) நீச்சல் பழக வேண்டும் என்று தனது அக்கா மாதரசி (13) என்பவரிடம் கூறியுள்ளார். ரம்யாவுக்கு மாதரசி நீச்சல் பழகிக் கொடுத்தபோது இருவரும் சேற்றில் சிக்கி மூழ்கியுள்ளனர்.

அவர்களுடன் குளித்து க்கொண்டிருந்த சண்முகம் என்பவரது மகள் பொன்மணி (10), ரம்யாவையும், மாதரசியையும் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அவரும் சேற்றில் சிக்கி மூழ்கியுள்ளார். இவர்களைக் காப்பாற்ற முயன்ற கோபால் என்பவர் மகள் கலைச்செல்வி என்ற காமாட்சி (12), ராமகிருஷ்ணன் மகள் ரம்யா (12) ஆகியோரும் அடுத்தடுத்துக் குளத்தில் இறங்கி மூழ்கினர்.

அப்போது, 5 பேரையும் காப்பாற்ற முயன்ற காளியப்பன் என்பவரது மகள் சங்கீதா (12), மற்றொரு காளியப்பன் மகன் கவிபிரியா (14) ஆகியோரும் நீரில் மூழ்கியபோது அவர்களது அலறல் கேட்டுச் சற்றுத் தொலைவில் துணி துவைத்துக்கொண்டிருந்த முத்துப்பாண்டி என்பவரது மகள் பார்வதி (21) ஓடிவந்து தான் வைத்திருந்த சேலையைத் தூக்கிப்போட்டுத் தத்தளித்து க்கொண்டிருந்த சங்கீதாவையும், கவிபிரியாவையும் காப்பாற்றினார்.

இதையடுத்து, இவர்கள் மூவரும் ஊருக்குள் ஓடிச்சென்று 5 சிறுமிகள் மூழ்கியது குறித்துத் தெரிவித்ததும், கண்மாயில் இறங்கித் தேடியதில் சேற்றில் சிக்கி இறந்த ரம்யா, மாதரசி, பொன்மணி, கலைச்செல்வி என்ற காமாட்சி, மற்றொரு ரம்யா ஆகிய 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இதுகுறித்துப் பரளச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சிறுமிகள் 5 பேரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர். ரம்யா 3-ம் வகுப்பும், மாதரசி 8-ம் வகுப்பும், கலைச்செல்வி என்ற காமாட்சி 8-ம் வகுப்பும், பொன்மணி 3-ம் வகுப்பும், மற்றொரு ரம்யா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

போலீஸார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதையடுத்து, சடலங்கள் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in