செல்போன் இருப்புத் தொகை மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகம்: மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்

செல்போன் இருப்புத் தொகை மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகம்: மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்
Updated on
2 min read

மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை செல்போன் இருப்பு தொகையிலிருந்து வசூலிக்கும் புதிய முறையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.

சென்னையில் ஆலந்தூர் கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக சின்னமலை விமான நிலையம் இடையே இம்மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடக்க விழாவுக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இதேபோல், கோயம்பேட்டி லிருந்து ஷெனாய்நகர் வரையில் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் சோதனை ஓட்டமும் நடந்து கொண்டிருக்கிறது. எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் பணிகளையும் 2017-ம் ஆண்டு இறுதிக்குள்முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந் நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை கொண்டு வர மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பதைத் தவிர்க்க தற்போது, ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த வசதியை மேலும், எளிமைப்படுத்தும் வகையில் செல்போன் இருப்பு தொகையிலிருந்து பயண கட்டணத்தை வசூலிக்க புதிய திட்டத்தை கொண்டுவரவுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் தற்போது சுமார் 10 கி.மீ. தூரத்துக்குதான் (ஆலந்தூர் - கோயம்பேடு) மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. இந்த வழித்தடத்தில் சராசரியாக தினமும் 20 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். இதுவே விடுமுறை நாட்களில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையில் பயணம் செய்கின்றனர். சின்னமலை விமான நிலையம் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதேபோல், படிப்படியாக மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கும் அடுத்த ஆண்டில் சேவை தொடங்கும்போது, பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

மக்களுக்கு பல்வேறு வசதிகளை கொண்டு வருவதில் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். விரைவான சேவை, வீண் அலைச்சலை தவிர்ப்பது, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், காப்பி ஷாப், முக்கிய இடங்களில் ஷாப்பிங் மால்கள், உயர்தர உணவகங்கள் ஆகியவற்றை கொண்டு வரவுள்ளோம். தற்போது, மெட்ரோ ரயில் டிக்கெட் கவுன்ட்டர்கள் மூலமும், சிலர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தியும் பயணம் செய்கின்றனர்.

அடுத்த கட்டமாக செல்போன் இருப்பு தொகையிலிருந்து மெட்ரோ ரயில் கட்டணத்தை வசூலிக்கும் முறையை கொண்டு வரவுள்ளோம். டிக்கெட் பெற்றதை உறுதி செய்யும் வகையில் பதிவு செய்யப்பட்ட உங்களது செல்போனுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) வந்துவிடும்.

செல்போன் நிறுவனங்களிடம்...

இத்திட்டத்தின் முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சில செல்போன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தனி மென்பொருளும் தயாரிக்க உள்ளோம். இது நடைமுறைக்கு வந்தால் பயணிகள் வரிசையில் நிற்க தேவையில்லை, சில்லறை பிரச்சினையும் இருக்காது.

மேலும், மெட்ரோ ரயில் கட்டணம் விவரம், வழித்தட வரைபடம் அகியவற்றை தெரிந்துகொள்ளவும், டிக்கெட் பெறவும் புதிய செயலியை (செல்போன் ஆப்) கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in