வேலை நிறுத்த போராட்டத்தை சீர்குலைக்க பாஜக திட்டம்: முத்தரசன் குற்றச்சாட்டு

வேலை நிறுத்த போராட்டத்தை சீர்குலைக்க பாஜக திட்டம்: முத்தரசன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

முழு அடைப்பு போராட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ள கருத்து அமைதியான போராட்டத்தை சீர் குலைக்கவும், கலகம் செய்திடவும் பாஜக திட்டமிட்டு இருப்பதாக தெரிகின்றது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "அனைத்துக் கட்சிகளின் சார்பில் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வுகாணக் கோரி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாளைய தினம் (25.04.2017) முழு கடையடைப்பு, வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு வணிகர்சங்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் விவசாயித் தொழிலாளர் சங்கங்கள், திரைப்பட துறையினர், அரசுப் பணியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் என அனைத்து தரப்பினரும் தங்களது முழு ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் பங்கெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த திரு.அய்யாகண்ணு போராட்டத்தை ஒத்திவைத்து நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தாங்கள் ஆளும் கட்சியாக இருப்பதால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு வேலை நிறுத்த போராட்டம் மிக அமைதியாக, அறவழியில் நூற்றுக்கு நூறு சதம் வெற்றிகரமாக நடைபெறுவது உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், பா.ஜ.க வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முழு அடைப்பு போராட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் அமைதியான போராட்டத்தை சீர் குலைக்கவும், கலகம் செய்திடவும் பாஜக திட்டமிட்டு இருப்பதாக தெரிகின்றது.

தமிழிசை அவர்களின் இத்தகைய அறிவிப்பை வன்மையாக கண்டிப்பதுடன், எத்தகைய வன்முறைகளுக்கும் இடமளிக்காது, அனைத்துக் கட்சி தொண்டர்களும் அனைத்துபகுதி மக்களின் பேராதவுடன் போராட்டத்தை முழு வெற்றியடைச் செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in