

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நள்ளிரவிலும், விடியற்காலை வேளையிலும் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவது என்பது சென்னையில் அதிகரித்துள்ளது. ஷாஜி, ஐஸ்வர்யா, வில்டன், நடிகர் அருண் விஜய் என இப்பட்டியல் நீளுகிறது. குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் செல்வாக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், செல்வந்தர் களாகவும் உள்ளனர். இதனால், அவர்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால், இதுமாதிரியான சம்பவங்களில் எந்த பாரபட்சமும் காட்டாமல், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும். மயிலாப்பூரில் சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய அந்த நபரால் ஏழை ஆட்டோ ஓட்டுநர்களின் ஆட்டோக்கள் சேதமாகின. ஆறுமுகம் என்றொரு ஆட்டோ ஓட்டுநர் மரணமடைந்துள்ளார். இதனால் அவரது குழந்தை ஆதரவின்றி உள்ளது. எனவே, விபத்தை ஏற்படுத்திய நபரின் குடும்பத்தாரிடமிருந்து ஆட்டோ உரிமையாளர்களுக்கு இழப்பீடும், ஓட்டுநர் ஆறுமுகத்தின் குழந்தையைப் பராமரிப்பதற்கான செலவுத் தொகையையும் பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.