உதய் மின் திட்டத்தை ஒப்புக் கொண்டாரா ஜெயலலிதா?- விளக்கம் அளிக்க கருணாநிதி கோரிக்கை

உதய் மின் திட்டத்தை ஒப்புக் கொண்டாரா ஜெயலலிதா?- விளக்கம் அளிக்க கருணாநிதி கோரிக்கை
Updated on
2 min read

உதய் மின் திட்டத்தை தமிழக அரசு ஒப்புக் கொண்டதா என்பது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவ அறிக்கையில், ''மின் உற்பத்தி விலையைக் குறைக்கவும், மின் விநியோகத் திறமையை மேம்படுத்தவும், மின் விநியோக அமைப்புகளின் வட்டிச் சுமையைக் குறைக்கவும் மின் விநியோக அமைப்புகளின் நிதி நிலை, மேலாண்மையை நிலைநாட்டவும் உதய் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மின் திருட்டை கட்டுப்படுத்துவதும், உற்பத்தி விலைக்கேற்ப மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதும் உதய் திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு அறிவித்தது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு கடந்த ஏப்ரலில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்து பேச முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என வெளிப்படையாக குற்றம்சாட்டினர்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், மின் திருட்டில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக மக்கள் நலனில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை. தமிழக மின்வாரியத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், வருவாயை அதிகரிக்கவும் உதவும் உதய் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வரவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்திய மற்ற மாநிலங்கள் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவுக்கு பயன்பெற்றுள்ளன என குற்றம்சாட்டியிருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் பதில் என்ன எனக்கேட்டு கடந்த 2-4-2016-ல் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இது தொடர்பாக அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் 6-4-2016-ல் வெளியிட்ட அறிக்கையில், உதய் திட்டத்தால் தமிழகத்துக்கு எந்தப் பலனும் இல்லை. இது குறித்து எதுவும் தெரியாமல் கருணாநிதி பேசிவருகிறார் என குற்றம்சாட்டியிருந்தனர்.

11-4-2016-ல் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, உதய் திட்டத்தால் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மின்வாரியங்களின் கடன்களை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் இந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தனியார் மின் உற்பத்தியாளர்கள், வங்கிகளுக்கு ஆதரவான திட்டம் இது. நிதிப் பொறுப்பு, செலவு மேலாண்மைக்கு 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தளர்வு செய்யப்படுவதால் அடுத்த ஆண்டிலிருந்து மாநில அரசால் கடன் எதையும் பெற முடியாது. மத்திய அமைச்சர் ஜவடேகர் பேசியது எதுவும் கருணாநிதிக்கு புரியவில்லை என குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என பகிரங்கமாக அறிவித்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அண்மையில் சென்னை வந்து முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளார். அதன் பிறகு தமிழக அதிகாரிகள் டெல்லி சென்று பேச்சு நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைய இருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மக்கள் நலன், விவசாயம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில் அரசு முடிவெடுத்திருந்தால் அதனை சட்டப்பேரவையில் அறிவித்திருக்க வேண்டும்.

மொத்தக் கடனில் 75 சதவீத்தை மாநில அரசு ஏற்க வேண்டும், 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது போன்ற கடுமையான அம்சங்கள் உதய் திட்டத்தில் உள்ளன. ஒருவேளை மின்துறை மானியக் கோரிக்கையின் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்களோ என்னவோ.

உதய் திட்டத்தை தமிழக அரசு ஒப்புக் கொண்டு விட்டதா என்பது குறித்து சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவிக்க வேண்டும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு எங்கே போய் முடியும் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in