அட்டப்பாடி தேக்குவட்டை பவானி ஆற்றில் அமைக்கப்பட்ட புதிய தடுப்பணை கதவுகள் உடைப்பு - மர்ம கும்பல் கைவரிசை?: கேரள போலீஸார் விசாரணை

அட்டப்பாடி தேக்குவட்டை பவானி ஆற்றில் அமைக்கப்பட்ட புதிய தடுப்பணை கதவுகள் உடைப்பு - மர்ம கும்பல் கைவரிசை?: கேரள போலீஸார் விசாரணை
Updated on
3 min read

தமிழக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கேரளா அட்டப்பாடி பவானியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தேக்குவட்டை தடுப்பு அணையின் கதவுகள் (ஷட்டர்கள்) சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன.

கோவையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் தாவளம் அருகே உள்ளது கேரளப் பகுதியான தேக்குவட்டை கிராமம்.

தமிழகத்தின் நீலகிரி மலைகளில் உருவாகும் பவானி, கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் நுழைந்து இந்த கிராமத்தின் வழியே பாய்கிறது. இங்கிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முள்ளி பகுதியில் தமிழகத்துக்குள் மீண்டும் நுழைகிறது இந்த நதி.

பிறகு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்துக்கும் பயன்படுகிறது.

இந்த சூழ்நிலையில், காவிரியில் தனக்குள்ள 6 டிஎம்சி தண்ணீர் உரிமையை முன்வைத்து தேக்குவட்டை உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டத் திட்டமிட்ட கேரள அரசு, 5 மாதங்களுக்கு முன் பணியைத் தொடங்கியது.

அதனால் தமிழகப் பகுதிகளில் தண்ணீர்ப் பிரச்சினை ஏற்படும் என்று புகார் தெரிவித்து, தமிழக விவசாயிகள், பொது நல அமைப்பினர், அனைத்துக் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. எனினும், தேக்குவட்டை பகுதியில் முதல் தடுப்பணையைக் கட்டி முடித்த கேரள அரசு, மஞ்சிக்கண்டி பகுதியில் 2-வது தடுப்பணை பணிகளையும் வேகமாகத் தொடங்கியது.

தமிழக அரசியல் சூழ்நிலையால் இந்தப் பிரச்சினையை கடந்த 2 மாதங்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி தேக்குவட்டை புதிய தடுப்பணையில் உள்ள 2 கதவுகளின் பூட்டுகளை உடைத்து விட்டு, கதவுகளை தூக்கிவிட்டுச் சென்றுள்ளது சமூக விரோதக் கும்பல். தகவலறிந்து வந்த அகழி போலீஸார் இந்தப் பகுதியில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

தடுப்பணையில் மொத்தம் 6 கதவுகள் உள்ளன. இந்த அணையின் பணிகள் முடிந்ததும், அவை சங்கிலி மற்றும் பூட்டுகளால் பூட்டப்பட்டுள்ளன. அணையில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீர் தேங்குவதாலும், தமிழகம் மட்டுமின்றி, அட்டப்பாடி விவசாயிகளுக்குள்ளும் பவானி நீர் பங்கீடு குறித்து பிரச்சினை உள்ளதாலும், தடுப்பணை திறப்பு உரிமை கேரள போலீஸின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.


தேக்குவட்டை தடுப்பணையில் தேங்கியுள்ள பவானி நதி நீர்.

திடீர் வெள்ளம்

பொதுவாக மாலை நேரங்களில்தான் பல்வேறு பகுதிகளில் பணி முடிந்துவரும் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது வழக்கம். மே தினத்தன்று விடுமுறை என்பதால் அதிக அளவில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குளித்துக் கொண்டிருந்தவர்கள் பயந்துகொண்டு கரைக்குத் திரும்பினர். பின்னர்தான், தேக்குவட்டை தடுப்பணையின் தெற்குப் பகுதியில் உள்ள 2 கதவுகளை சிலர் உடைத்துள்ளதும், அவற்றை கையோடு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. அந்த நபர்கள் 6 கதவுகளையும் உடைத்து எடுத்துச் சென்றிருந்தால், அணையில் இரு கிலோமீட்டர் பரப்பில் தேங்கியுள்ள தண்ணீரும் மொத்தமாக ஆற்றில் பாய்ந்து, சிலரை அடித்துச் சென்றிருக்கும்.

அகழியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் சிலர்தான் அணைக் கதவை உடைத்ததும், அதை பஞ்சாயத்தில் ஒப்புக் கொண்டதும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிந்ததாம். எனினும், ஆளுங்கட்சியினர் இப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. சமூக விரோத கும்பல்தான் இதை செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றனர்.

இந்த அணை கட்டப்பட்டுள்ள தேக்குவட்டை கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்கள், மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.

தேக்குவட்டை அணையில் தண்ணீர் தேங்குவதாலும், அங்குள்ள விவசாயிகள் ஆயிரக்கணக்கான மின் மோட்டார்களைப் பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுவதாலும், அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாவடியூர் வரை தண்ணீர் வருவதில்லை என்று 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இதையொட்டி, புதூர், அகழி பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்று கூடிப்பேசி, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆற்றோர விவசாயிகள் யாரும் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சக்கூடாது என்று முடிவு செய்து, அதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் காரணமாக அணையின் கதவுகள் உடைக்கப் பட்டதா அல்லது மாவோயிஸ்ட்கள் போன்ற தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்தார்களா என்பது இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக கேரள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகழி போலீஸார் விளக்கம்

தேக்குவட்டை தடுப்பணை கதவுகள் மர்ம நபர்களால் உடைத்து, எடுத்துச் செல்லப்பட்டது குறித்து அட்டப்பாடி அகழி காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகத்தில் கேட்டபோது, “எங்களுக்கு அதுகுறித்து எதுவுமே தெரியாது. அதிகாரிகள் வெளியில் சென்றுள்ளனர்” என்று போலீஸார் கூறினர்.

இது தொடர்பாக தேக்குவட்டை விவசாயிகளிடம் கேட்டபோது, “இந்த விவகாரம் தமிழ்நாட்டுக்குத் தெரியக்கூடாது என்று இங்குள்ள போலீஸார் கருதுகின்றனர். கேரளாவிலேயே இந்த அணை கட்டுவதற்கு எதிர்ப்பு உள்ளது என்று தெரிந்தால், அதையும் குறிப்பிட்டு தமிழகத்தில் உள்ளவர்கள் போராட்டம் நடத்துவர். எனவே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தார்களா என்பதுகூட சந்தேகமே” என்றனர்.


சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டப்பட்டுள்ள அணைக்கதவு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in