Published : 01 Sep 2016 07:47 am

Updated : 14 Jun 2017 18:39 pm

 

Published : 01 Sep 2016 07:47 AM
Last Updated : 14 Jun 2017 06:39 PM

ஒருதலைக் காதலால் 3 கொலைகள்: இளைஞர்களின் மனதை கெடுக்கிறதா திரைப்படங்கள்?

3

தமிழக காவல் துறை அதிகாரிகள் பேசுகிறார்கள்

ஒருதலைக் காதலால் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் கடந்த ஜூலை 24-ம் தேதி காலையில் ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப் பட்டார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரூரில் கல்லூரிக்குள் நுழைந்து சோனாலி என்ற மாணவியை, அதே கல்லூரியில் படித்த உதயகுமார் என்ற முன்னாள் மாணவர் கட்டையால் தாக்கி கொலை செய்தார். ஒருதலைக் காதலை ஏற்க சோனாலி மறுத்ததால் ஆத்திரமடைந்த உதயகுமார் இவ்வாறு செய்துள்ளார்.


இதே ஒருதலைக் காதலால் தூத்துக் குடியில் நேற்று தேவாலயத்தில் பிரார்த் தனை செய்து கொண்டிருந்த ஆசிரியை பிரான்சினா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த 3 கொலை களும் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறிய கருத்துகள் வருமாறு:

மா.கருணாநிதி (ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர்)

‘‘ஒரு திரைப்படத்தை பார்க்கும் குழந்தை, அதன் மனதில் பதிந்த காட்சிகளை சில நாட்களுக்கு தனது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கச் செய்யும். இதேபோல இளைஞர்களும் நடந்து கொள்கின்றனர். இது ஒரு மன பாதிப்பு பிரச்சினை. இதற்கு ‘copycat’ என்று பெயர். முந்தைய காலங்களில் திரைப்படங்களில் வரும் ஹீரோக்கள் நல்லவராகவும், உயர்ந்த இடத்தில் இருப்பவராகவும் காண்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிவரும் பல படங்களில் கீழ் நிலையில் இருக்கும் ஹீரோ உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்ணை காதலிப்பதும், தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்வதன் மூலம் அவரை அடைய முடியும் என்பது போலவும் காட்சிகள் உள்ளன. இதையே இளைஞர்களும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த நினைக்கின்றனர். தற்போது நடை பெற்றுள்ள 3 கொலைகளும் இதே ரகத்தை சேர்ந்தவைதான்.

ஒரு வீட்டில் உடைந்திருக்கும் ஜன்னல் குற்றவாளிகளுக்கு அழைப்பு விடுப்பது போல இருக்கும். குற்ற வாளிகள் அடைய நினைக்கும் இலக்கை கடினமாக்குவதே நம்மை பாதுகாப்பதற்கான சிறந்த வழி. ஆண்களின் இலக்கு பெண்கள். ஆண்கள் நன்றாக பழகினாலும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது தவறு செய்கிறார்கள். எனவே பெண்கள் தங்களை கடினமாக்குவதன் மூலம் ஆண்களின் வன்முறையில் இருந்து தப்பிக்கலாம். ஆண்கள் எவ்வளவு பழகினாலும் அவர்களை குறிப்பிட்ட இடைவெளியில்தான் எப்போதும் வைக்க வேண்டும். பெண்கள் தங்களால் காத்துக்கொள்ள முடியாத பட்சத்தில் குடும்பத்தினரின் உதவியை உடனடியாக கேட்க வேண்டும்.

காவல் நிலையத்துக்கு வரும் அவசர புகார்களை, காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ்காரரே உடனடியாக விசாரிக்க வேண்டும். ஆய்வாளர் அல்லது உயர் அதிகாரி வரும் வரை காத்திருக்கக் கூடாது. இப்படி செய்வதன் மூலம் பல தவறுகள் தடுக்கப் படும்" என்று கருணாநிதி தெரிவித்தார்.

பி.கே.செந்தில்குமாரி (காவல் கண்காணிப்பாளர்)

இதுபோன்ற கொலைகள் திட்ட மிட்டு அல்லது பழிக்குப் பழியாக நடப்பதில்லை. ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களில் திடீரென ஈடுபடுவதால், அதன் பின்விளைவுகள் என்ன என்பது அவர்களுக்குத் தெரி யாது.

ஒரு கொலையால் தனது குடும்பம் மீதான சமூக பார்வை குறித்து அவர் களுக்கு சரியான புரிதல் இருக் காது. மனப்பக்குவம் இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத, தங்களிடம் இருக்கும் குறைகளை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள்தான் இப்படி நடந்துகொள்வார்கள். இதற்கு, முகநூல், வாட்ஸ்-அப் போன்றவையும் ஒரு காரணம் என கூறலாம்.

முகநூல் பக்கம், வாட்ஸ்-அப் குழுக்களில் தங்கள் கருத்துகளை தைரியமாக பதிவு செய்யும் பெரும் பாலானவர்கள் நிஜத்தில் அப்படி நடந்துகொள்வதில்லை. பொது இடத்தில் தயக்கத்துடன் செயல்படுகின்றனர். சுவாதி கொலை சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த நிலை மாற வேண்டும். சமூகத்தின் மீதான அக்கறையை தைரியமாக வெளிக் கொண்டுவர வேண்டும்.

ஒரு பிரச்சினை நம்மை பாதிக்காத வரையில் நமக்கு ஏன் கவலை என்றிருக்கும் நிலை மாற வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியமானது. மாறிவரும் சமூகத்தின் நிலையைக் கருதி பள்ளி, கல்லூரி அளவில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். பிள்ளைகளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்துகொடுக்கும் பெற்றோர், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ப தையும் கண்காணிக்க வேண்டும்.

எஸ்.விஜயகுமார் (திருநெல்வேலி, உதவி ஆணையர்)

தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு புறத்தூண்டுதல்களால் இளை ஞர்களும், இளம் பெண்களும் பாதிக்கப் படுகிறார்கள். அத்தகைய புறத்தூண்டு தல்களுக்கு ஆளாகாமல் இருக்க இளைஞர்களை தயார்படுத்த வேண்டும். பல்வேறு தடைகளைத் தாண்டி இளைஞர்களும், இளம் பெண்களும் சாதிக்கிறார்கள் என்பதை வளரும் இளம் பருவத்தினருக்கு உணர்த்தினால் இது போன்ற சம்பவங்களை தடுக்கலாம்.

முன்பெல்லாம் பள்ளிகளில் நன்னெறி கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போதெல்லாம் அது இல்லை. பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவியருக்கு நல்லொழுக்க வகுப்புகளை நடத்த வேண்டும். பாலின வேறுபாடு இருக்கக் கூடாது என்பதை இளம் வயதிலேயே அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். அதேநேரத்தில் வருங்காலத்தில் இதுபோன்ற குற்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும்.

ஆ.சரவணன் (திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்)

சட்டங்களை கடுமையாக்கி குற்ற வாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்து விடுவதால் மட்டுமே இது போன்ற காதல் விவகார கொலை களுக்கு தீர்வு காண முடியாது. படிக்கின்ற வயதில் ஏற்படுவது காதல் அல்ல. அது ஒரு முகக் கவர்ச்சியே. விளையாட்டாக காதலிக்கத் தொடங்கி அதில் ஏமாற்றம் ஏற்படும்போது உடனிருக்கும் நண்பர்கள், சமூக நெருக்கடியால் அவர்கள் கொலை செய்யும் அளவுக்கு துணிகின்றனர். இந்த தவறுக்கு, அவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. குடும்ப சூழல், பள்ளி, சினிமா, டிவி மற்றும் சமூகச் சூழல் உள்ளிட்டவை மறைமுக காரணிகளாக இருக்கின்றன.

குறிப்பாக சினிமாவில் சொல்லப்படும் காதல், வன்முறை ஆகியவற்றை உண்மை என நினைக்கின்றனர். காதலிக் கும் பெண் மறுக்கும்போது, சினிமாவில் வரும் ஜோடிப்பு காட்சிகளை நிஜமாக்க துணிகின்றனர். இதில் பெற்றோர்கள், கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. தற்போது பள்ளிகளில் மதிப்பெண் கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒழுக்கம் சார்ந்த நல்லொழுக்க கல்விக்கு முக்கி யத்துவம் தரப்படாததால் பள்ளிகள் அளவிலேயே மாணவர்கள் தனி மனித ஒழுக்கம் இல்லாமல் வளருகின்றனர்.

10-ம் வகுப்பு வரை மட்டுமே மாண வர்கள், பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். அதன்பின், அவர்கள் பார்க்கும் சினிமா, சமூகத்தை பார்த்து பெண்களை பற்றி தவறாக சிந்திக்க தொடங்கிவிடுகின்றனர். தற்போது எல்லா மாணவர்களிடமும், ஸ்மார்ட் போன் உள்ளது. அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மாணவர்கள் எங்கு செல்கின்றனர், என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். பெண் குழந்தைகள் வெளியே செல்லும்போது சுற்றியுள்ளவர்களிடம் எப்படி பழக வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை பெற்றோர் கற்றுக் கொடுப்பதுடன், கண்காணிக்கவும் செய்கின்றனர். அதே போன்று ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். மாண வர்கள் பலரின் மனநிலை தெளி வற்றே உள்ளது. பலவீனமான மனநிலை யில் சில நேரங்களில் காதல் விவ காரம் மட்டுமல்லாமல் அவர்கள் நினைக்கும் காரியங்கள் நடக்கா விட்டாலும் விரக்தியடைவதுடன், கோபப் படுகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கின்றனர்.

பெண் குழந்தைகளும் பெற்றோர் படிப்பை நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் தங்களுடைய பிரச்சினை களை பெற்றோரிடம் சொல்லாமல் மறைக்கின்றனர். இதுவே கடைசியில் விபரீதமாக முடிகிறது. இதற்கு பெற்றோர், கல்வி நிறுவனங்கள், சமூக தன்னார்வ அமைப்புகள் இணைந்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிகள் அளவில் மாணவர்களுக்கு நன்னெறி கதைகள், பாடங்களை சொல்லிக் கொடுத்து ஆலோசனை வழங்க வேண்டும்.

டி.ஆர்.ராஜசேகர், (ஓய்வுபெற்ற உதவி ஆணையர்)

ஒருதலைக் காதலால் நிகழக் கூடிய கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் போதிய அளவு அக்கறை காட்டாததே. ஆண்களைப் பொறுத்தவரை 20 முதல் 25 வயது வரை பாலின ஈர்ப்பு அதிகமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளிக்காவிட்டால், சிலர் தவறான பாதையை தேர்வு செய்துவிடுகின்றனர். படிப்பு, தொழில் போன்ற பயனுள்ள செயல்களில் நேரத்தை செலவிடாமல், காதல் செய் வதில் நேரத்தை வீணடிக்கின்றனர். இதில் ஏமாற்றம் நேரிடும்போது, அதை தாங்க இயலாமல், கொலைக்கும் துணிந்து விடுகின்றனர். இந்த போக்கு, தற்போது அதிகரித்து வருவது நல்லதல்ல. ஓர் ஆணும் பெண்ணும் நெருங்கி பழகும்போது எந்த இடத்திலும் எல்லை மீறாமல் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். ஆண்களிடமிருந்து எந்த வகையிலாவது நெருக்குதலோ, தொந்தரவோ இருந்தால், அதுபற்றி உடனடியாக குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக ஒருதலைக் காதல் விவகாரங்களில் இது முக்கியம். அப்போதுதான் பிரச்சினைக்கு ஆரம்ப நிலையிலேயே தீர்வுகாண முடியும். இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். நடத்தையில் சிறு மாறுதல் என்றாலும் உடனடியாக அவர்களை அழைத்துப் பேசி எண்ணம், செயலை நல்வழிப்படுத்த வேண்டும். வீட்டுக்கு நல்ல குழந்தையாக இருப்பவர்களால்தான், நாட்டுக்கு நல்ல குடிமக்களாக இருக்க முடியும். "குறிப்பிட்ட பேருந்துக்காகவோ அல்லது பெண்ணுக்காகவோ ஒரு போதும் காத்திருக்க வேண்டாம். அடுத் தது விரைவில் வரும்" என்ற பெர்னாட் ஷாவின் வார்த்தைகளின் அர்த்தத்தை ஒவ்வொருவரும் உணர்ந்துகொண்டால், இதுபோன்ற பிரச்சினைகளே இருக்காது.

அ. கலியமூர்த்தி (ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர்)

பெற்றோர்கள் மரத்தின் வேர்களைப் போன்றவர்கள். பிள்ளைகள் அதில் பூத்துக்குலுங்கும் பூக்களைப் போன்றவர்கள். வேர்களின் பலத்தைப் பொறுத்தே, பூக்களின் வசீகரம் அமையும். வேர்கள் பட்டுப்போனால், பூக்கள் கெட்டுப்போகும். பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து, அவர்களுடன் செலவிடும் நேரம். இப்போதைய காலகட்டத்தில், பிள்ளைகளுடன் பெற் றோர்கள் நேரம் செலவிடாமல் இருப்பது அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்காக எவ்வளவுதான் சொத்து சேர்த்து வைத்தாலும், அவர்களிடம் போதிய நேரத்தை செல விடாவிட்டால் குழந்தைகள் வீணாகி விடுகிறார்கள். பிள்ளைகள் கெட்டுப் போகின்றனர் என்பதை கடைசியாகத் தெரிந்துகொள்பவர்கள் பெற்றோர்களே.

குழந்தைகளின் முதல் உலகம் பெற்றோர். ஆனால் குழந்தைகளின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்க பெற்றோருக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் தகாத நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துதல், புகைபிடித்தல், போதைப் பழக்கம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். மதுவே பெரும் பாலான தவறுகளுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது.

பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் இவர்க ளுக்கு, "நோ" சொல்லத் தெரிவ தில்லை. இப்படி பழகிய குழந்தைகள், ஒருதலைப்பட்சமாக காதலித்த பெண் கிடைக்காவிட்டால் தவித்துவிடுகின்ற னர். அந்த பெண், தன்னை விரும்ப வில்லை என்றால், அதை ஒப்புக் கொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் கொண்டவர்களாக இப்போதைய பிள் ளைகள் இல்லை. தனக்கு கிடைக்காத வர், யாருக்கு கிடைக்கக்கூடாதென நினைக்கின்றனர். படிக்கும்போது நல்லது எது, கெட்டது எது என்று நெறிசார்ந்த வாழ்க்கை முறைகளைச் சொல்லித்தர ஆசிரியர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. அவர்கள் மதிப் பெண்களின் பின்னாலேயே ஓடிக்கொண் டுள்ளனர். இந்த சூழலில் ஊடகங்களில் (சினிமா, டி.வி, இணையதளங்கள்) பாலியல் தொடர்பான தகவல்கள் எளிதில் காணக் கிடைக்கின்றன. முறை யற்ற பாலுணர்வு, வக்கிரமான எண்ணம் போன்றவை குறித்த செய்திகள் வரு கின்றன. இவற்றைப் படிக்கும் இளை ஞர்கள், இதுதான் உலக இயல்பு என நினைத்துக் கொண்டு தாங்களும் அதுபோல செயல்பட முயற்சிக்கின்றனர்.

"சிறப்புடை மரபின் பொருளும், இன்பமும் அறத்து வழிப்படுஉம்" என்பது புறநானூறு. தனக்கோ அல்லது குடும்பத்துக்கோ வரும் பொருளும், இன்பமும் முறையான வழியில் வர வேண்டும் என்பது இதன் பொருள். ஆனால் குழந்தைகளுக்கு இதை யாரும் சொல்லித் தருவதில்லை. இன் றைய கல்விமுறை பொருள் சார்ந்ததாக இருக்கிறதே ஒழிய, அறம் சார்ந்ததாக இல்லை. அறம் சார்ந்த கல்வி முறைதான் இதயத்தைத் தொடும். ஒழுக்கத்தை உருவாக்கி வளர்ப்பதுதான் கல்வியின் தலையாயக் குறிக்கோள். அதை முறையாகச் செய்ய வேண்டும்.

கருவறை முதல் கல்லறை வரை பெண்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. பெண்கள் ஒரு பிரச்சினை வந்தால் எதைப் பற்றியும் யோசிக்காமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பெற்றோர்களும், காவல் நிலையங்களில் இதைத் தெரியப்படுத்த தயங்கக் கூடாது. இவ்வாறு சொல்லிவிட்டால் தொடக்கத்திலேயே பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அதேபோல, பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை முழுமையாக நம்ப வேண்டும்.
ஒரு தலைக் காதல்3 கொலைகள்இளைஞர்கள் மனதுகெடுக்கிறதா திரைப்படங்கள்தமிழக காவல் துறை அதிகாரிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x