

நெட், ஸ்லெட் ஆகிய உதவிப் பேராசிரியர் தகுதித்தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்க மாநில வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஜி.சத்யபாமா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு களுக்கு (நெட் மற்றும் ஸ்லெட்) சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 2-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இந்த இலவசப் பயிற்சியில் முதுகலை பட்டதாரிகள் சேரலாம்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தேவையான கல்விச் சான்றிதழ் நகல்களுடன் ஏப்ரல் 24 முதல் 28-ம் தேதி வரை ஏதேனும் ஒரு வேலைநாளில் காலை 10.30 மணிக்கு மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விவரங்களைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.