Published : 05 Apr 2016 05:30 PM
Last Updated : 05 Apr 2016 05:30 PM

தேமுதிகவில் இருந்து சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகள் நீக்கம்: அதிருப்தியாளர்கள் மீது விஜயகாந்த் அதிரடி

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிய தேமுதிகவின் 3 எம்எல்ஏக்கள், 5 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனால் கட்சியில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. தேமுதிகவின் அவசர செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை கூட்டப்பட்டுள்ளது

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. அனைத்து பிரதான கட்சிகளிலும் ஏறக்குறைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேமுதிகவில் செவ்வாய்க்கிழமை திடீர் பூகம்பம் வெடித்தது. | அதன் விவரம் > ம.ந.கூட்டணியில் இருந்து விஜயகாந்த் விலக வேண்டும்: சந்திரகுமார் தலைமையில் தேமுதிகவினர் போர்க்கொடி |

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கப்பட்டது தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், செய்தியாளர் கூட்டம் நடத்திய அடுத்த சில மணி நேரங்களில், தேமுதிக அதிருப்தி நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

தேமுதிக எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்), சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், மற்றும் துணைச் செயலாளர் தேனி முருகேசன், உயர்மட்டக் குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.விஸ்வநாதன் (வேலூர் மத்தி), என்.கார்த் திகேயன் (திருவண்ணாமலை), செஞ்சி சிவா (விழுப்புரம்), இமயம் என்.எல்.சிவக்குமார் (ஈரோடு தெற்கு மாநகர்), பி.செந்தில்குமார் (ஈரோடு வடக்கு) ஆகிய 10 பேரையும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

தேமுதிகவின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 10 பேரும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.

நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்குப் பதிலாக புதிய மாவட்டப் பொறுப்பாளர்களும் உடனடியாக நியமிக்கப்பட்டனர். ஏ.வி.ஆறுமுகம் (திருவள்ளூர் கிழக்கு), பாபு முருகவேல் (திருவண்ணாமலை வடக்கு), ஸ்ரீதர் (வேலூர் மத்தி), பி.ஆனந்தபாபு (சேலம் மேற்கு), பி.கே.சுப்பிரமணி (ஈரோடு வடக்கு), பா.கோபால் (ஈரோடு தெற்கு) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிருப்தியாளர்கள் கொந்தளிப்பு

‘‘தேமுதிகவில் இருந்து இவ்வாறு எங்களை நீக்குவதற்கு விஜயகாந்துக்கு எந்த அதிகாரமும் இல்லை’’ என்று எஸ்.ஆர்.பார்த்திபன் கூறினார்.

திமுகவுடன் கூட்டணி?

தேமுதிக அதிருப்தியாளர்கள் வட்டத்தில் உள்ள நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘‘எங்கள் தியாகத்தை மறந்துவிட்டு விஜயகாந்த் சுயநல மாக முடிவு எடுக்கிறார். மக்கள் நலக் கூட்டணியில் இணையக் கூடாது என்று பலமுறை கூறினோம். இன்று (5-ம் தேதி) காலைகூட விஜயகாந்திடம் எடுத்துச் சொன்னோம். ‘‘இருக்கிறவர்கள் இருங்கள், பிடிக்காதவர்கள் கிளம்புங்கள்’’ என்று கோபமாக பேசினார். அதனால்தான் செய்தியாளர்களை சந்தித்தோம். அதிமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பேசி வருகிறோம். கூட்டணி உறுதியானால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம். இதுதொடர்பான அறிவிப்புகள் 6-ம் தேதி (இன்று) வெளியாகலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x