தீவுத்திடலில் தண்ணீரில் மிதக்கும் பட்டாசுக் கடைகள்: வியாபாரிகள் கவலை

தீவுத்திடலில் தண்ணீரில் மிதக்கும் பட்டாசுக் கடைகள்: வியாபாரிகள் கவலை
Updated on
1 min read

சென்னையில் பெய்த கனமழையால் தீவுத்திடலில் உள்ள பெரும்பாலான பட்டாசுக் கடைகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் பட்டாசுகள் நீரில் நனைந்துள்ளதாகவும், இன்னும் பட்டாசு வியாபாரம் சூடு பிடிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்தாண்டு தீபாவளியை யொட்டி தீவுத்திடலில் சென்ற 13-ம் தேதி மாலை பட்டாசுக்கடைகள் திறக்கப் பட்டன. தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக 120 அரங்குகள் உள்ளன. இதில் லட்சக்கணக் கான ரூபாய் மதிப்பில் பட்டாசுகள் விற்பனக்கு உள்ளன. இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்கள் பெய்த கன மழையால் இந்த பட்டாசுக் கடைகள் தண்ணீரில் மிதப்பதாகவும், பட்டாசுகள் மழையில் நனைவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மந்தமான விற்பனை

இது தொடர்பாக அங்கு பட்டாசு கடை வைத்துள்ள ரஹமதுல்லா என்பவர் கூறியதாவது: பல ஆண்டுகளாக பாரிமுனையில் தீபாவளி பட்டாசு விற்பனை மேற்கொண்ட நாங்கள், நீதிமன்ற தீர்ப்பை மதித்து தீவுத்திடலில் கடைகள் அமைத்துள்ளோம். தீவுத் திடலில் கடைபோட நிறைய பணம் செலுத்த வேண்டும். இதையெல்லாம் செய்துதான் பட்டாசுக்கடை அமைத்துள்ளோம். ஆனால் இந்தாண்டு பட்டாசு வியாபாரம் ரொம்பவும் சுமாராகத் தான் உள்ளது. இந்நிலையில் மழை வேறு குறுக்கீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பட்டாசுக்கடைகள் தண்ணீரில் மிதக்கின்றன. மேலும் கடைக் குள்ளேயே மழைநீர் வழிவதால் பட்டாசுகள் நனைகின்றன. இவற்றை தடுக்க அரசு தரப்பில் முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மழையால் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக தீவுத்திடல் பட்டாசு வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் ரஹ்மானிடம் கேட்ட போது, “தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை. மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரை 10 மோட்டார்களை வைத்து வெளியேற்றியுள்ளோம். மேலும் தண்ணீர் கடைகளுக்குள் புகாத வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. தீவுத்திடலில் போடப்பட்டுள்ள கடைகளில் டி பிளாக்கில் மட்டும் லேசான அளவு தண்ணீர் ஒழுகியது. ஆனால் அதையும் சரி செய்து விட்டோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in