

நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பின்னணி குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. கூறினார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
நாடு முழுவதும் 40 இடங் களில் எண்ணெய் வளம் கண்ட றியப்பட்டு, அவற்றில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க திட்டமிடப்பட் டுள்ளது. தற்போது தரைப் பகுதி யில் 28 இடங்களிலும், கடல் பகுதியில் 16 இடங்களிலும் ஆய் வுப் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இதற்காக போராடும் அனைவரும் நாட்டு நலனுக்காக, மக்களுக்காக போராடுபவர்கள் அல்ல. இவர்களின் பின்னணி குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.
நெடுவாசலில் குறைந்த அளவு நிலத்தை கையகப்படுத்தி நவீன தொழில்நுட்பம் மூலம் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கக் கூடாது. அதே நேரத்தில் திட்டமே வேண்டாம் என்பதையும் ஏற்க முடியாது.
சேதுசமுத்திர திட்டம்
ராமர் பாலத்தை பாதிக்காமல் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல் படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. பொதுமக் களை பாதிக்கும் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.
தமிழகத்தில் தற்போதைய அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் மனநிலையை புரிந்து கொண்டால் அரசு வேறு மாதிரியாக இருந்திருக்கும். நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவது போல், சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.