

இரு மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது மத்திய அரசின் சட்டப்பூர்வ கடமை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடங்கிய நாள் முதல் இன்று வரை மத்திய அரசு நடுநிலை காக்கத் தவறியதன் காரணமாக, இருமாநில மக்களிடையே பகை உணர்வு மேலோங்கி வருகிறது.
இரு மாநிலங்கிடையே காவிரி நதிநீர் பிரச்சினை தொடங்கி இரு மாநில அதிகாரிகள் மற்றும் முதல்வர்களிடையே பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் தீர்வுகாண இயலாமல் அவை தோல்வியடைந்தன.
மத்திய அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. நடுவர்மன்றம் அமைத்து தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையினையும் மத்திய அரசு ஏற்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் தொடந்த வழக்கின் காரணமாகவும், 110 கி.மீ தூரம் மனித சங்கிலி அமைத்து காவிரி பாசனப்பகுதி மக்கள் கொடுத்த அழுத்தத்தாலும் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், அப்போது ஆட்சியில் இருந்த வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு நடுவர் மன்றம் அமைத்தது.
நடுவர் மன்றம் விரிவான விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பை 2007ல் வழங்கியது. இதன் பின்னரும் மத்திய அரசு நடுவர் மன்றத்தீர்ப்பை அரசிதழில் (கெஜட்டில்) வெளியிடவில்லை.
மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வழக்கு தொடுத்து இதன் மீது 2013 உச்ச நீதிமன்றம் அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டப் பிறகுதான் மத்திய அரசு, நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றை அமைத்திட வேண்டும். இத்தீர்ப்பையும் இன்று வரை மத்திய அரசு செயல்படுத்தாமல் காலம் கடத்துகின்றது.இதன் விளைவாக காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்ய இயலவில்லை.
கடந்த ஐந்தாண்டு காலமாக தொடர்ச்சியாக குறுவை சாகுபடி செய்ய இயலவில்லை. இதனால் ஆண்டு தோறும் ரூ.1200 கோடி அளவிற்கு நாட்டிற்கும், விவசாயிகளுக்கும் பெரும் நட்டம் ஏற்படுகிறது.
நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்திட போதுமான அளவிற்கு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் கொடுத்திட மறுத்து வருகின்றது. மேலும் மேகதாதுவில் ஒரு அணையை கட்டப்போவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகின்றது.
நடுவர் மன்றத்தீர்ப்பின் படி உரிய தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டிய மத்திய அரசு மவுனம் சாதித்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற காரணத்தால், நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 தினங்களுக்கு கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கடந்த 05.09.2016 அன்று தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீரை வழங்கினால் 13 டி.எம்.சி வரைதான் தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும். இதனைக் கொண்டு சம்பா சாகுபடி செய்ய இயலாது. தமிழகம் கோரிய 50 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தால் ஒரளவு சம்பா சாகுபடிக்கு உதவும்.
ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தக் கூடாது என்று, கர்நாடகத்தில் போராட்டம் நடைபெறுகின்றது. இன்று பந்த் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள், கர்நாடக மாநில அரசு போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளது. குறைந்தபட்ச தண்ணீர் வழங்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யுமாறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் முயற்சியும் உள்ளது. தமிழகத்தில் தண்ணீர் வேண்டும் என்று போராட்டம் - கர்நாடகத்தில் தண்ணீர் கொடுக்காதே என்கிற போராட்டம்.
தமிழ்நாடும், கர்நாடகமும் வெவ்வேறு தேசங்கள் அல்ல, இந்தியாவில் உள்ள, இந்திய ஆட்சி எல்லைக்கு உட்பட்ட, அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள இருமாநிலங்களாகும். இரு மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை யார் தீர்ப்பது, வெவ்வேறு நாடுகளாக இருப்பின் ஐ.நா.சபை செல்லலாம். இது இருநாட்டு பிரச்சினை அல்லவே.
இரு மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது மத்திய அரசின் சட்டப்பூர்வ கடமைப் பொறுப்பாகும். இதனை தவிர்த்து மவுனம் காப்பதன் நோக்கம் என்ன? இரு மாநில மக்களிடையே பகை உணர்வு வளர்ந்தோங்கி வருவதை கண்டும், கண்களை இறுக மூடிக்கொண்டு மத்திய அரசு காலம் கடத்துவது ஏன்?
இத்தகைய சூழலில் மத்திய அரசுக்கு வலிமையான நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளதை தமிழகம் உணர்ந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினையாகும். ஒட்டு மொத்த தமிழகத்தின் நலன்; சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளையும், சங்கங்களை ஓரணியில் திரட்டி, ஒருமித்த குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டிய தமிழக அரசு அதனைத் தட்டிகழித்து, தன்னிச்சையான செயல்பாட்டின் மூலமே தீர்வுகாண வேண்டும் என்று முயற்சிக்கிறது. இதுவே தமிழ்நாட்டின் பெரும் பலவீனமாக உள்ளது.
மத்திய அரசு தனது வஞ்சகமான செயல்பாட்டை கைவிட வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றை மேலும் தாமதிக்காமல் உடனடியாக அமைத்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசு அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்தி ஒன்றுப்பட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமிட வேண்டும். கர்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெற்று காவிரி பாசன மாவட்ட விவசாயத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.