வறட்சியால் பதநீர் உற்பத்தி கடும் பாதிப்பு: அழிவின் விளிம்பில் பாரம்பரிய பனைத் தொழில்

வறட்சியால் பதநீர் உற்பத்தி கடும் பாதிப்பு: அழிவின் விளிம்பில் பாரம்பரிய பனைத் தொழில்
Updated on
2 min read

வறட்சி காரணமாக இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆண்டு தோறும் பனைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தற்போது வறட்சி காரணமாக பனைத் தொழில் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது.

பனைத் தொழில்

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் தான் பனை மரங்கள் அதிகம். இதனால் இம்மாவட்டங்களில் பனைத் தொழிலாளர்களும் அதிகமாக இருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு காலத்தில் பனைத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வந்தது. உடன்குடி, வேம்பார் கருப்பட்டிக்கு இன்றளவும் உள்ள வரவேற்பே இதற்கு சான்று. விளாத்திகுளம், எட்டயபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களில் பனைத் தொழிலாளர்கள் அதிகம்.

வறட்சியால் பாதிப்பு

ஆனால், கடந்த 30 ஆண்டு களாக பனைத் தொழில் கடும் நலிவை சந்தித்து வருகிறது. ஆண்டு தோறும் பனையேறும் தொழி லாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி, பனைத் தொழிலை அழிவின் விளிம்புக்கே கொண்டு வந்துவிட்டது. உடன்குடி. சாத்தான்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடுமையான வறட்சியை தாங்க முடியாமல் பல பனை மரங்கள் பட்டுபோய்விட்டன.

பாளையே வரவில்லை

குளங்கள், ஏரிகள், கால்வாய் கள், தோட்டங்களில் உள்ள பனை மரங்கள் மட்டுமே வறட்சியை தாங்கி நிற்கின்றன. அவற்றிலும் இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பனை மரங்களில் பாளையே (பூ) வரவில்லை. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் பதநீர் சீசன் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாத கடைசியில் தான் பதநீர் சீஸனே தொடங்கியுள்ளது.

அந்தோணியார்புரம்

தூத்துக்குடி அருகே பதநீருக்கு பிரசித்தி பெற்ற அந்தோணி யார்புரத்தில் ஊர் கமிட்டி சார்பில், ஆண்டு தோறும் மார்ச் மாத தொடக்கத்திலேயே பதநீர் விற்பனையை தொடங்குவார்கள். இந்த ஆண்டு கடந்த வாரம் தான் தொடங்கியுள்ளனர். அதுவும் குறைந்த அளவு பதநீரே விற்பனைக்கு வருகிறது. இது குறித்து அந்தோணியார் புரம் ஊர் கமிட்டி தலைவர் ச.மிக்கேல் ஜெபமாலை கூறியதாவது:

வறட்சி காரணமாக இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பிப்ரவரி மாதமே பதநீர் உற்பத்தி தொடங்கி விடும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் கடைசியில் தான் தொடங்கியுள்ளது. ஊர் கமிட்டி சார்பில் பதநீர் விற்பனையை கடந்த வாரம் தான் தொடங்கியுள்ளோம். ஊரில் உள்ள அனைத்து பனைத் தொழி லாளர்களிடமும் பதநீரை மொத்த மாக வாங்கி நாங்களே விற்பனை செய்கிறோம். இதில் கிடைக்கும் வருவாயை கொண்டு தான் எங்கள் ஊர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறோம்.

75 படி தான் வருகிறது

வழக்கமாக இந்த காலத்தில் 150 படி (ஒரு படி என்பது 1.75 லிட்டர்) பதநீர் வரை கடைக்கு வந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு 75 படி அளவுக்கு தான் வருகிறது. தொழிலாளர்களிடம் இருந்து ஒரு படி பதநீரை ரூ. 45 விலை கொடுத்து வாங்குகிறோம். நாங்கள் அதனை ரூ. 90-க்கு விற்பனை செய் கிறோம். கடந்த ஆண்டு ரூ. 35-க்கு வாங்கி ரூ. 70-க்கு விற்பனை செய்தோம்.

ஒரு லிட்டர் பதநீரை ரூ. 50-க்கும், 300 மி.லி. அளவு கொண்ட ஒரு டம்ளர் பதநீரை ரூ. 15-க்கும் விற்பனை செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு லிட்டர் பதநீரை ரூ. 40-க்கும், 250 மி.லி. அளவு கொண்ட டம்ளர் ரூ. 10-க்கும் விற்பனை செய்தோம்.

ஆசிரியர்களுக்கு சம்பளம்

மூன்று மாதம் பதநீர் விற்பனையில் கிடைக்கும் வருவாயில் தான் மூன்று ஆசிரியர்களுக்கு ஆண்டு முழுவதும் ஊதியம் கொடுக்கிறோம். மேலும் பள்ளிக்கு தேவை யான செலவுகளையும் சமாளிக்கிறோம். ஒவ்வொரு தொழிலாளியும் தினமும் 30 படி முதல் 50 படி வரை பதநீர் தருவார்கள். தற்போது 10 படி அளவுக்கு தான் தருகிறார்கள். தினமும் காலை 5.30 மணிக்கு விற்பனையை தொடங்குவோம். மாலை 6 மணி வரை விற்பனை செய்வோம். ஆனால், இந்த ஆண்டு மதியம் 12 மணிக்கே பதநீர் விற்று தீர்ந்துவிடுகிறது.

குறையும் தொழிலாளர்கள்

இந்த ஆண்டு அந்தோணியார் புரத்தில் 9 பேர் தான் பனை ஏறு கின்றனர். அவர்களில் 6 பேர் தான் தற்போது பதநீர் இறக்குகின்றனர். கடந்த ஆண்டு ஊர் பதநீர் கடைக்கு 12 பேர் பதநீர் கொடுத்தனர். அதற்கு முந்தைய ஆண்டு 15 பேர் இந்த தொழிலை செய்தனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரில் 100 பேர் வரை பனை ஏறும் தொழில் செய்தனர். இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து வருகிறது.

ஏற்கெனவே பனை ஏறும் தொழில் செய்யும் பெரியவர்கள் மட்டுமே இந்த தொழிலை செய்கின் றனர். அதிலும் ஆண்டு தோறும் சிலர் தொழிலை விட்டுவிடுகின்றனர். புதிதாக யாரும் இந்த தொழிலுக்கு வருவதில்லை.

காப்பாற்ற வேண்டும்

இன்னும் ஒரிரு மாதங்கள் மழை பெய்யவில்லை என்றால் பெரும்பாலான பனை மரங்களை பட்டுபோய்விடும். எனவே, தமிழகத் தின் பாரம்பரிய அடையாளமான பனை மரங்களையும், பாரம்பரிய தொழிலான பனைத் தொழிலையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in