

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற் சிகள் தீவிரம் பெற்று வருகின்றன. இருக்கை அமைய ரூ.40 கோடியை பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டும். இதுவரை சுமார் ரூ.11 கோடி அளவுக்கு மட்டுமே நிதி சேர்ந்துள்ளது. நிதி சேகரிப்புக்காக உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கனடியத் தமிழர் பேரவையின் ஆதரவில், பிரபல பரதநாட்டியக் கலைஞர் நிரோதினி பரராஜசிங்கத்தின் இயக்கத்தில் உருவான ‘யக்ஞசேனி’ என்று தலைப்பிடப்பட்ட நாட்டிய நாடகம், கனடா நாட்டின் டோரண்டோ நகரில் சமீபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் திரட்டப்பட்ட 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.16 லட்சம்), ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்புக் குழுவிடம் வழங்கப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் பார்வை யாளர்கள் மனதை கொள்ளை கொண்ட ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடகம், மகாபாரத திரவுபதியின் கதையாகும். தமிழ் இருக்கை ஆட்சிக் குழுவின் உறுப்பினர்களும் தொடக்க நன்கொடையாளர்களுமான டாக்டர் திருஞான சம்பந்தம், எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஆகியோர் நிதியை பெற்றுக் கொண்டனர். அப்போது பேசிய முத்துலிங்கம், “யக்ஞசேனி என்றால் யாக நெருப்பில் பிறந்தவள் என்று பொருள். திரவுபதியைப்போலவே உலகத் தமிழர்களின் உள்ளத்து நெருப்பில் இருந்து ஹார்வர்ட் தமிழ் இருக்கை பிறக்க இருக்கிறது. அதற்கு மிகப்பொருத்தமாக நாடகம் அமைந்துவிட்டது” என்றார்.