

விவசாயிகளின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என விசிக முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு உரிய அளவில் காவிரி நீர் வழங்க மறுப்பதாலும் , வடகிழக்குப் பருவமழை பொய்த்ததாலும், லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு பயிர்கள் கருகிப் போயுள்ளன.
இதனால், பயிர்த்தொழிலை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ நூறு பேர் அதிர்ச்சியாலும் தற்கொலை செய்தும் உயிர்ப்பலியாகியுள்ளனர்.
இத்தகைய நிலையில் தமிழக அரசு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூபாய் மூன்று லட்சமும், விளைச்சல் பாதிப்புக்கு ஏக்கருக்கு தலா ரூபாய் ஐயாயிரத்து எழுநூறும் (5,700), இழப்பீடு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 25 லட்சமும், ஏக்கருக்கு தலா ரூ 25 ஆயிரமும் வழங்கிடவேண்டுமென விடுக்கப்பட்ட எமது கோரிக்கையை அரசு புறந்தள்ளியிருப்பது வேதனை அளிக்கிறது. அத்துடன், நிலமே இல்லாத விவசாயக் கூலித் தொழிலாளர்களை முற்றிலும் புறக்கணித்துள்ளனர் என்பது பெருங்கொடுமையாகும்.
மைய அரசும் இந்த அவலத்தை வேடிக்கைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமும் தற்போது வறட்சியால் பெரும்பாதிப்புக்குள்ளாகியிருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
இந்நிலையில், உழைக்கும் மக்களின் இந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என விசிக முடிவு செய்துள்ளது'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.