

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் வரும் ஆண்டுகளில் முழு அளவில் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வசதியாகப் பாசனத் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் உணவுத் தேவை யைப் பூர்த்தி செய்யும் நெல் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் காவிரி டெல்டா மாவட்டங் கள் பங்காற்றி வருகின்றன.
மோட்டார் பம்புசெட்டு வசதியுள்ள பகுதிகளில் குறுவை சாகுபடி ஏறத்தாழ மூன்று மாவட்டங் களிலும் சேர்த்து 1.10 லட்சம் ஹெக்டேரில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகின்றன. இது முழு நேரமும் மும்முனை மின்சாரம், நிறைவான நிலத்தடி நீர் மட்டம், திருப்தியான மேட்டூர் அணை நீர்மட்டம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இல்லையெல் சொற்ப அளவில் தான் குறுவை சாகுபடி நடைபெறும்.
சம்பா மற்றும் தாளடி சாகு படியைப் பொறுத்தவரையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் வழக்கமான சாகுபடி பரப்பு ஏறத்தாழ 4 லட்சம் ஹெக்டேர். இதுவும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு, வரத்து, பருவமழை ஆகியவற்றைச் சார்ந்ததுதான்.
இந்நிலையில் இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்கு என ஆகஸ்ட் 2-ம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு ஆகியவற்றில் முழு கொள்ள ளவுக்குத் தண்ணீரைத் திறந்து விட்டும், வயல்களில் நீர் பாய வில்லை.
இதனால் சம்பா நாற்றுகளை நடவு செய்ய முடியாமல் விவசாயி
கள் திணறினர். மேலும், நடவு செய்யப்பட்ட பயிர்களும் தண்ணீ ரின்றிக் காய்ந்தன. ஆறுகளில் வெள்ளம் போல் தண்ணீர் சென் றாலும், வயல்களுக்குத் தண்ணீர் ஏறிப் பாயவில்லை.
இதனால் தண்ணீர் ஆறுகளில் வீணாகச் சென்று கடலில் கலந்ததே தவிர, பாசனத்துக்குப் பயன்படவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
இதற்கு முக்கியக் காரணம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆறுகளைத் தூர் வாரு
கிறோம் என்ற பெயரில் ஆறுக ளிலிருந்த மணல்களைச் சுமார் 5 அடி ஆழத்துக்குச் சுரண்டி எடுத்துவிட்டனர். இதற்கு என அரசு ஒதுக்கீடு செய்த பல கோடி ரூபாய்கள் அதிகார வர்க்கங்களால் தவறான கணக்குகள் காட்டப்பட்டு, ஒதுக்கிக் கொள்ளப்பட்டன என்பதுதான் விவசாயிகள் பல ஆண்டுகளாகச் சொல்லி வரும் தீர்க்கப்படாத குற்றச்சாட்டு.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் பி.ஆர்.பாண்டியன் கூறியது: பாசன ஆறுகள் பலவும் பள்ளமாகிவிட்டன. மதகுகளும், பாசனம் பெற வேண்டிய பகுதிகளும் மேடாக உள்ளன. பாசனத்துக்காக ஆறுகளின் முழு கொள்ளளவையும் தாண்டி தண்ணீர் விட்டாலும் அவை வாய்க்கால்களில் ஏறிப் பயிர்களுக்குச் சென்று சேரவில்லை. வயல் காய்கிறது என விவசாயிகள் கோரிக்கை விடுக்கும் போது கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்படுகிறது. இவையும் பயனற்றுக் கடலுக்குச் செல்கிறது.
மேலும் ஆறுகளின் நடுவே உள்ள பெரிய அளவிலான மண்மேடுகள் அகற்றப்பட வேண்டும். இந்த மண் மேடுகளால் ஆற்றில் நீரின் போக்கு மாற்றப்பட்டு, வாய்க்கால்களுக்குத் தண்ணீர் செல்லாமல் சாலைகளில் அரிப்பும், கரைகளில் உடைப்பும் ஏற்படுகின்றன.
இதைப் போக்கும் வகையில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக்கே, மதகுகளுக்கு அருகே தளமட்ட சுவர்கள் கட்டப்பட வேண்டும். அப்போதுதான் தண்ணீர் அந்த இடத்தில் தேங்கி மதகுகள் வழியாக வாய்க்கால்களில் ஓடி வயல்கள் பாசனம் பெறும்.
வரும் ஆண்டிலும் ஆறுகளைத் தூர் வாருகிறோம் என்ற பெயரில் நிதியை வீணடிக்காமல், ஆறுகளின் குறுக்கே தளமட்ட சுவர்களைக் கட்டுவது, மதகுகளைச் சீரமைப்பது போன்ற பயனுள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் பாண்டியன்.
டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்பட்ட மேட்டூர் அணை வழக்கமாக ஜனவரி மாத இறுதியில் மூடப்படும். அப்போதே இந்தப் பணிகளைத் தொடங்கி, ஜூன் மாதத்துக்கு அணை திறக்கப்படுவதற்கு முன்பாக முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறை, விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்து எந்தெந்தப் பகுதிகள் கடந்த காலங்களில் தண்ணீர் பாயாமல் பாதிக்கப்பட்டன, எந்தெந்த இடங்களில் தளமட்ட சுவர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கான மதிப்பீடுகளைத் தயாரித்து, டிசம்பர் மாதத்திலேயே நிதியை ஒதுக்கி, பணியை ஜனவரி மாதத்தில் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.
அப்போதுதான் வரும் ஆண்டில் குறைந்த அளவு தண்ணீர் வந்தாலும் பாசனத்துக்கு முழு அளவில் தண்ணீர் கிடைக்கும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பது தான் டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயம் வரும் ஆண்டுகளிலாவது செழிக்க இந்த விஷயத்தில் முதல்வரின் நேரடித் தலையீடு அவசியம் என்கின்றனர் விவசாயிகள்.