நான் சொல்லாத 90%-ஐ என்னுள் புதைத்துவிட்டேன்: ஓபிஎஸ் சிறப்புப் பேட்டி

நான் சொல்லாத 90%-ஐ என்னுள் புதைத்துவிட்டேன்: ஓபிஎஸ் சிறப்புப் பேட்டி
Updated on
2 min read

நான் சொல்லாத 90% உண்மையை என்னுள்ளேயே புதைத்துவிட்டேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 7-ம் தேதி சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சியில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் அதன்பின்னர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்திருக்கிறார். அதன் சாராம்சம்:

கட்சித் தலைமைக்கு எதிராக உங்களைப் பேசத் தூண்டியது யார்?

நான் இதுநாள்வரை மிகப் பொறுமையாக இருந்திருக்கிறேன். ஆனால், அதே பொறுமையை தொடர்ந்து கடைபிடித்தேன் என்றால் தமிழக மக்களுக்கு தெரிய வேண்டிய உண்மைகள் பல தெரியாமலேயே போய்விடும். நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது அதற்கான எதிர்வினை மிகவும் மோசமாக இருந்தது. என் மீது தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன அதன் காரணமாகவே எனது ராஜினாமா தொடர்பான உண்மைகளை நான் எடுத்துரைத்தேன். நான் கூறிய உண்மைகளை கட்சியினர் யாரும் மறுக்க முடியாது.

தங்களுக்கு 131 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக சசிகலா தரப்பு கூறுகிறது. நீங்கள் அவையில் பெரும்பான்மையை நிரூப்பிப்பேன் என்கிறீர்களே..

எனக்கு தொடர்ந்து கட்சியினர் ஆதரவு அளித்து வருகின்றனர். எனக்கான ஆதரவு தொடரும். அதன் நீட்சியாக அவையில் நான் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டால் புதிய கட்சி தொடங்குவீர்களா?

நான் அதிமுகவின் அடிமட்ட தொண்டன். என் இறுதிநாள் வரை அதிமுகவில்தான் இருப்பேன். பல்வேறு பொதுக்கூட்டங்களிலும் ஜெயலலிதா, அதிமுக பலநூறு ஆண்டுகள் நீடித்திருக்கும் எனக் கூறியிருக்கிறார். அதற்கான வலுவான அடித்தளத்தையும் அம்மா அமைத்திருக்கிறார். கட்சிக்கும், அரசுக்கும் களங்கம் விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் நான் ஈடுபடமாட்டேன்.

ஜெயலலிதா விட்டுச் சென்ற உயில் பற்றி ஏதாவது தெரியுமா?

அம்மாவின் விசுவாசியாக மட்டுமே நான் இருந்திருக்கிறேன். அவர் கொடுத்த பணிகளை திறம்பட செய்வேன். அதைத் தாண்டி அவரைப் பற்றிய எந்த விஷயத்தையும் தெரிந்துகொள்ள நான் முற்பட்டதில்லை. நல்ல தொண்டனின் அழகு தலைமை வகுத்துத் தரும் பணிகளை மேற்கொள்வதே தவிர தலைமைக்கு ஆலோசனை சொல்வது அல்ல. அந்த மாதிரியான விவகாரங்களை கவனித்துக் கொள்ள வேறு சிலர் இருந்தார்கள். எனவே, நான் அம்மாவின் அரசியல் லட்சியங்களை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். இனிமேலும் எனது கவனம் அதில் மட்டுமே இருக்கும்.

ஒருவேளை ஜெயலலிதாவின் உயில் கிடைக்கப்பெற்று அதில் சசிகலாதான் அரசியல் மற்றும் சொத்துகளுக்கான வாரிசு என ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தால்..

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அந்த உயிலின் உண்மைத்தன்மையை சட்ட நிபுணர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில், உயில் எழுதியிருக்கும் பட்சத்தில் சட்ட நிபுணர்களை கலந்தாலோசிக்காமல் ஜெயலலிதா முடிவு செய்திருக்கமாட்டார்.

இப்போது அதிமுக தலைமையை எதிர்க்கும் நீங்கள் சட்டப்பேரவையில் அவரைப் புகழ்ந்து எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் பேசும்போது ஆமோதித்தீர்களே..

அதிமுக கட்டுக்கோப்பான கட்சி. எங்களது உரையில் எப்போதும் கட்சித் தலைமையை பாராட்டிப் பேசுவோம். முன்பு அம்மாவை பாராட்டுவோம். இப்போது பொதுச் செயலாளர் பதவியில் சசிகலாதான் இருக்கிறார். அதனால், அவரைப் பாராட்டுகிறோம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்த்தீர்களா?

இல்லை. அவரைப் பார்க்க என்னை அனுமதிக்கவே இல்லை. அந்த ஏமாற்றம் என் வாழ்நாள் முழுவதும் என்னைத் துரத்தும்.

10% உண்மையை மட்டுமே கூறியிருக்கிறேன் என்றீர்கள். மீதமுள்ள 90% பற்றி எப்போது மவுனம் கலைப்பீர்கள்?

நான் சொல்லாத 90% உண்மையை என்னுள்ளேயே புதைத்துவிட்டேன் அதை வெளிப்படுத்த விரும்பவில்லை.

உங்களது பணியில் சசிகலாவின் குடும்பத்தினர் தலையீடு இருந்ததா?

கடந்த இரண்டு மாதங்களாக நான் முதல்வராக இருந்தபோது எந்தத் தலையீடும் இல்லை.

ஜெயலலிதாவால் நீங்கள் ஓரங்கட்டப்பட்டீர்கள் என்ற கருத்து நிலவுகிறதே..

அம்மா ஒருபோதும் என்னை ஓரங்கட்டியத்தில்லை.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பை ஒருங்கிணைத்தது யார்?

நான் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்தேன்.

சசிகலா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் முதல்வராவது 100% நிச்சயம் எனக் கூறியிருக்கிறார். உங்கள் கருத்து?

அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

- தமிழில்: பாரதி ஆனந்த்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in