Published : 25 Mar 2015 01:24 PM
Last Updated : 25 Mar 2015 01:24 PM

தமிழக பட்ஜெட்: செல்போன், எல்இடி பல்புகளுக்கு வரிச்சலுகை

தமிழக சட்டப்பேரவையில் முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2015-16 பட்ஜெட்டில், செல்போன், எல்இடி பல்புகள், மீன்பிடி சாதனங்களுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு, வரி வருவாய், சலுகைகள் குறித்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்:

மொத்த வருவாய் வரவுகளில் 2014-2015 ஆம் ஆண்டில் 71.06 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வருவாயின் பங்கு, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 73.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நிதிச்சுமை உயர்ந்துள்ள இந்த நிலையிலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் குறைந்த வளர்ச்சியே உள்ளபோதும், புதிய வரிகள் எதனையும் விதிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன், உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்காக சில முக்கிய வரிச் சலுகைகளை வழங்கவும் இந்த அரசு முன்வந்துள்ளது. இதன்படி பின்வரும் வரி விகித மாற்றங்களை நமது அரசு செயல்படுத்தும்.

அ) பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உயிரி எரிபொருள் ((Biomass) மூலம் (கரும்பு சக்கையை தவிர) உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான வரி விலக்கிக் கொள்ளப்படும்.

ஆ) தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களில் உள்ள உற்பத்தி அலகுகளோடு சிறப்பாகப் போட்டியிட ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டம் 2006 பிரிவு 19 (2) (எ)ன் கீழ் கொண்டுவரப்பட்ட காப்புரையின்படி 11.11.2013 முதல் விதிக்கப்பட்ட 3 சதவீத உள்ளீட்டு வரி திருப்பம் (Input Tax Credit Reversal) திரும்பப் பெறப்படும்.

இ) 'சி' படிவமின்றி நடைபெறும், மாநிலங்களுக்கு இடையேயான பொருள் விற்பனைகளிலும் உள்ளீட்டு வரி வரவை (Input Tax Credit Reversal) வணிகர்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக, 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் பிரிவு 19(5)-ன் கீழ்வரும் கூறான (உ)-ஆனது இனிமேல் விலக்கிக் கொள்ளப்படும். இந்த நடவடிக்கையினால் 'சி' படிவமின்றி பொருட்களின் மீதான மாநிலங்களுக்கு இடையேயோன விற்பனையினை மேற்கொள்ளும் வணிகர்களது கூடுதல் சுமை தவிர்க்கப்படும்.

ஈ) மீன்பிடி கயிறுகள், மீன்பிடி மிதவைகள், மீன்வலை முறுக்கு நூல், மீன்பிடி விளக்குகள் மற்றும் மீன்பிடி திருப்புகை போன்ற மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப்பொருட்கள் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.

உ) அனைத்து வகையான கொசு வலைகளுக்கு தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.

ஊ) நெய்தலுக்கு முன்பாக நூலுக்கு பசையிடுவது தொடர்பான (sizing of yarn) ஒப்பந்தப்பணிகளுக்கு (works contract) மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

எ) ஏலக்காய் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.

ஏ) மின்சேமிப்புக்கான கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, அனைத்து வகையான ஒளி உமிழ் டையோடு விளக்குகள் (LED lamps) மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

ஐ) மாநிலத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு நன்மை பயக்கவும், காற்றழுத்த கருவிகள் (air compressors), 10 குதிரைத்திறன் வரையிலான மோட்டார் பம்புகள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி, 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

ஒ) கைபேசிகள் (celluar telephones/mobile phones) மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி, 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.

மேற்காணும் வரிச்சலுகைகள் மூலமாக அரசிற்கு ஆண்டொன்றுக்கு 650 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

வருவாய் வரவு மதிப்பீடு:

இந்த அறிவிப்புகளைக் கருத்தில் கொண்டு 2015-2016 ஆம் ஆண்டிற்கான வருவாய் வரவு மதிப்பீடுகளை பேரவையின் முன் வைக்கிறேன். வணிக வரி வசூல் 2015-2016 ஆம் ஆண்டிற்கு 72,068.40 கோடியாக மதிப்பிடப்படுள்ளது.

இதுபோன்றே, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவின் மூலம் கிடைக்கும் வருவாய் 10,385.29 கோடி ரூபாய் அளவிலும், ஆயத் தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய் 7,296.66 கோடி ரூபாய் அளவிலும், வாகனங்கள் மீதான வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 4,882.53 கோடி ரூபாய் அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, 2014-2015 ஆம் ஆண்டு கணிக்கப்பட்டுள்ள அளவை விட 12.02 சதவீத அளவில் மட்டுமே வரி வருவாய் வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளதால், வரும் நிதியாண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 96,083.14 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 21,149.89 கோடி ரூபாய் எனவும், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் மானிய உதவி 16,376.79 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறு 2015-2016 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் வரவுகள் 1,42,681.33 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக வரிகள் எவற்றையும் உயர்த்தாமல், நிர்வாகத் திறனை மேம்படுத்தியும், வரி வசூல் அமைப்பை முடுக்கிவிட்டும் மேற்கூறிய வருவாய் இலக்குளை இந்த அரசு எட்டும்.

வருவாய், நிதி பற்றாக்குறை...

மதிப்பிடப்பட்டுள்ள வருவாய் வரவான 1,42,681.33 கோடி ரூபாயை ஒப்பிடும்போது, வருவாய் செலவினங்கள் 1,47,297.35 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளன. எனவே, 2015-2016 ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறை 4,616.02 கோடி ரூபாயாக இருக்கும். வரி வருவாய் வளர்ச்சி குறைவாக உள்ளதாலும், மானியங்களுக்கும், சமூகநலத் திட்டங்களுக்கும் உயர் ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டுள்ளதாலும் இந்த வருவாய்ப் பற்றாக்குறை தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

2015-2016 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவு 27,213.17 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை அளவு 31,829.19 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டிற்கு மாநிலத்திற்கு நிகரக் கடன் வரம்பு 32,990 கோடி ரூபாய் என்ற அளவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வரும் ஆண்டில் 30,446.68 கோடி ரூபாய் நிகரக் கடன் மட்டுமே பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால், 2016 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன் 2,11,483 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை அளவு மூன்று சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த அளவு 2.89 சதவீதமாக மட்டுமே இருக்கும்.

மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன்களின் அளவு 25 சதவீதத்திற்குள்ளாக இருக்க வேண்டும் என்ற வரையறையைவிடக் குறைவாக, அதாவது இந்த அளவு 19.23 சதவீதம் அளவிலேயே நமது மாநிலத்தில் உள்ளது. இதனால் கடினமான நிதிச்சூழல் நிலவிவரும் போதிலும், சரியான நிதிநிலை கோட்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றி, நிதிப்பற்றாக்குறையையும், மொத்த நிலுவைக்கடன் அளவையும், வரையறைகளுக்கு உள்ளாகவே கட்டுப்படுத்த இந்த அரசு கவனமாகச் செயல்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x