

ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர் என்று கூறிக்கொண்டு ஏமாற்றி வந்தவரை கோயம்பேட்டில் போலீஸார் கைது செய்தனர்.சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை ரயில் நகர் சந்திப்பில் கோயம்பேடு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் நேற்று காலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது, ஊதா நிற காரில் வந்தவர் சிக்னலை மதிக்காமல் செல்ல முயன்றார்.
காரில் சைரன் விளக்கு பொருத்தப்பட்டு, முன்பும்-பின்பும் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த காரை பாண்டியராஜன் மறித்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த நபர் அதிலிருந்து இறங்காமல், ஒரு ஐடி கார்டை எடுத்து காண்பித்து, ‘ஐபிஎஸ் அதிகாரியான என் காரையே பிடிக்கிறீர்களா’ என்று உதவி ஆய்வாளர் பாண்டியராஜனிடம் பேசிவிட்டு, அவரது பதிலை எதிர்பார்க்காமல் உடனே காருடன் சென்றுவிட்டார்.
அந்த நபர் மீது சந்தேகம் அடைந்த பாண்டியராஜன், அடுத்த சிக்னலில் நின்றிருந்த உதவி ஆய்வாளர் சக்திவேலுக்கு வாக்கி-டாக்கி மூலம் தகவல் கொடுத்தார். அவர் உஷாராகி காரை நிறுத்தச்சொல்லி சிக்னல் காண்பிக்க கார் நிற்காமல் சென்றது.
உடனே போலீஸார் அந்தக் காரை மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று நெற்குன்றம் படேல் சாலையில் வழிமறித்து பிடித்தனர். காரில் இருந்தவரை இறங்கச்சொல்லி விவரங்களை கேட்டனர். அப்போதும் அவர் தோரணையாக பேச, கோயம்பேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவரது காரை சோதனை செய்தபோது, ஐஏஎஸ் அதிகாரி என்று ஒரு அடையாள அட்டையும், ஐபிஎஸ் அதிகாரி என்று மற்றொரு அடையாள அட்டையும் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அவரது பர்ஸை சோதனை செய்தபோது, விவேகானந்த மிஸ்ரா (45), டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நரம்பியல் துறை டாக்டராக பணியாற்றுவதாக தெரிவிக்கும் விசிட்டிங் கார்டு வைத்திருந்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர் என்று இவர் வைத்திருந்த அடையாள அட்டைகளை பார்த்து போலீஸாருக்கே தலை சுற்றிவிட்டது. அதைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அனைத்து விவரங்களும் தெரிய வந்தன.
பிடிபட்டவரின் பெயர் விவேகானந்த மிஸ்ரா. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் விளம்பரப் பிரிவு அதிகாரியாக வேலை செய்கிறார். ஆவடி அருகே அண்ணனூர் சிவசக்தி நகரில் தங்கியுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி என்று இடத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கூறி பலரை ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர் வேறென்ன மோசடிகளைச் செய்திருக்கிறார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.