

ராமேசுவரத்தில் கிளாத்தி மீன்களின் வரத்து திடீரென அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேசுவரம் தீவு, மன்னார் மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதி களில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடித் தொழிலில் பயன்பட்டு வருகின்றன. இலங்கை கடற்படையின் தாக்கு தல் மற்றும் சிறைப்பிடிப்பு சம்பவங் களால் பெருமளவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள், கிளாத்தி மீன்களின் வரத்து திடீரென அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேசுவரம் கடற்பகுதிகளில் பிடிக்கப்படும் கிளாத்தி மீன்கள், தமிழகத்தின் பிரதான மீன் சந்தைகள் மட்டுமின்றி கேரளத்துக்கு அதி களவில் அனுப்பப்படுகின்றன. கிளாத்தி மீன்கள் கோழித்தீவனம் தயாரிப்பதற்காக நாமக்கல் மாவட்டத்துக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இதுகுறித்து மீனவர் ஜெரோன் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது,
ராமேசுவரம் கடற்பகுதியில் சீலா மீன் என்றழைக்கப்படும் நெய் மீன், வஞ்சிரம், விலை மீன், பாறை, சூடை, சூவாறை உள்ளிட்ட மீன்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. உயர் ரக மீன்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது கிளாத்தி மீன் சீசன் தொடங்கியுள்ளது. படகு ஒன்றில் சராசரியாக 50 முதல் 100 கூடைகள் வரையிலும் கிடைக்கின்றன. ஒரு கூடையில் 15 கிலோ முதல் 20 கிலோ மீன்கள் வரை வைக்கலாம். தற்போது கிளாத்தி மீன்களை அதிகமாக கொள்முதல் செய்ய கேரளத்தில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.
கிளாத்தி மீன்கள் கோழித்தீவனம் தயாரிக்கப் பயன்படும் என்ப தால், தரிசு நிலங்களில் உலர வைத்து திண்டுக்கல், நாமக்கல் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன என்றார்.