

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ரகசிய வாக்குமூலம் அளிக்க அட்டாக் பாண்டி முன்வந்துள்ளார். இதற்கு அனுமதி கேட்டு அவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை செப். 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ், மதுரை சத்தியசாய் நகரில் கடந்த 31.1.2013ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் போலீஸார் தேடி வந்த அட்டாக் பாண்டி, மும்பையில் 22.9.2015-ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அட்டாக் பாண்டி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 2வது ஜாமீன் மனுவை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதேபோல் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பர் ராம்கி என்ற ராமகிருஷ்ணனை கோ.புதூரில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கிலும் அட்டாக் பாண்டியின் ஜாமீ்ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அட்டாக் பாண்டியின் இரு ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், பொட்டு சுரேஷ் கொலை, ராம்கி கொலை முயற்சி வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகி வரும் குற்றம் சாட்டப்பட்டோர் மீதான வழக்கை தனியாக பிரித்து 6 மாதத்தில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு மதுரை 4வது நீதித்துறை நடுவர் கவுதமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 18 பேரில் அட்டாக்பாண்டி உள்பட 15 பேர் ஆஜராகினர். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் என்.இளங்கோ வாதிட்டார்.
அப்போது இந்த வழக்கில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக நீதித்துறை நடுவரிடம் அட்டாக் பாண்டி தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, பாளை சிறையில் என்னிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் நான் கொலை தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்களை தெரிவித்தேன். அந்த தகவல்களை அவர்கள் பதிவு செய்யவில்லை. பொட்டு சுரேஷ் கொலைக்கு முன்பு சென்னையில் ஒரு ஓட்டலில் சதித்திட்டம் தீட்டியதாக போலீஸார் கூறியுள்ளனர். அந்த ஓட்டலில் நான் தங்கியிருந்த போது பதிவான வீடியோ பதிவுகளை தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டு மனு செய்துள்ளேன். அந்த வீடியோ பதிவுகள் வந்ததும் ரகசிய வாக்குமூலம் அளிக்க முடிவு செய்துள்ளேன். அதற்கு அனுமதி தர வேண்டும். பொட்டு சுரேஷ் கொலை வழக்கின் விசாரணையை புதிதாக நடத்தக்கோரி ஏற்கெனவே மனு ஒன்றை தாக்கல் செய்து, அது நிலுவையில் உள்ளது என்றார்.
பின்னர் இது தொடர்பாக அட்டாக் பாண்டி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து அடுத்த விசாரணையை செப். 28ம் தேதிக்கு நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார். முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக குற்றப்பத்திரிகை நகல்களை போலீஸார் நீதிமன்றத் துக்கு எடுத்து வந்திருந்தனர்.
ராம்கி கொலை முயற்சி வழக்கு 6வது நீதித்துறை நடுவர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அட்டாக் பாண்டி, பிரபு, பிரவீன், மாரிமுத்து ஆகியோர் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.