ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், ஓட்டுநர் கனகராஜ் மரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், ஓட்டுநர் கனகராஜ் மரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Updated on
1 min read

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் ஆகியோரின் மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் மு.க.ஸ்டா லின் கூறியிருப்பதாவது:

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நம்பும்படியாக இல்லை. அமைச்சரின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியபோது சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் பல மணி நேரம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதில் பல மர்மங்கள் உள்ளன. அமைச்சருக்கு எதிராக கிடைத்த ஆவணங்களுக்கு முக்கிய சாட்சியாக இருந்த சுப்பிரமணியத்தின் தற்கொலை ஒட்டுமொத்த விசாரணையையும் திசைதிருப்பும் விதத்தில் அமைந் துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி அடித் துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை, கொள்ளையில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார் என காவல் துறையினர் அறிவித்தார்கள். இவர் முதல்வர் கே.பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வழக்கில் தொடர்புடைய சயன் என்பவர் அதே தினத்தில் வேறொரு இடத்தில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறை அறிவித் துள்ளது.

இந்த இரு வழக்குகளையும் தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது. எனவே, சுப்பிரமணியன், கனகராஜ் ஆகிய இருவரின் மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த முதல்வர் கே.பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறி யுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in