

சிறுநீரக விற்பனையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பின்னால் உள்ள கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சிறுநீரகத்தை பணம் கொடுத்து வாங்க முயன்ற இரண்டு பெண் நோயாளிகளும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.
சென்னையில் பணத்திற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்ய முயன்ற தண்டையார்பேட்டையை சேர்ந்த தேவி என்கிற பத்மா (30), வில்லிவாக்கத்தை சேர்ந்த சரஸ்வதி (40) ஆகியோரை கீழ்ப்பாக்கம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி சிறுநீரக விற்பனை செய்யும் தரகர்களான தண்டையார்பேட்டையை சேர்ந்த சோபியா (30), கொருக்குப்பேட்டையை சேர்ந்த தேவி (33), ஓட்டேரியை சேர்ந்த கிரிஜா (43) மற்றும் சரஸ்வதியின் கணவர் ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் சனிக்கிழமை மாலையே போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் அன்று இரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிறுநீரகத்தை விற்பனை செய்ய வந்த தேவி என்கிற பத்மாவின் கணவர் மணியை கைது செய்ய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தப்பியவரை பிடிக்க தீவிரம்:
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:சிறுநீரகத்தை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தரகர்
கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும் ஒரு முக்கிய குற்றவாளியான மணி என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். இன்னும் ஓரிரு தினத்தில், அவரை பிடித்துவிடுவோம்.
பெரிய நெட்வொர்க்:
சிறுநீரக விற்பனையில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதாக தகவல் வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பின்னால் உள்ள கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் பிடிப்படுவார்கள்.
சிறுநீரக விற்பனைக்கும், அமைந்தக்கரை தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்.
பெண் நோயாளிகள் விரைவில் கைது:
சிறுநீரகத்தை பணத்திற்காக விற்பனை செய்வதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம். அதனால், சிறுநீரகத்தை பணம் கொடுத்து வாங்க இருந்த ஈரோடு மாவட்டம் மேலப்பாளையம் சென்னிமலையை சேர்ந்த ஜெயமணி (38) மற்றும் கொளத்தூர் தணிகாச்சலம் நகரை சேர்ந்த சந்திரா (35)ஆகியோரும் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நல்ல வருமானம்:
சிறுநீரக விற்பனையில் தரகராக செயல்பட்ட ஓட்டேரியை சேர்ந்த கிரிஜா (43) என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது. அவர் பணம் கொடுத்து சிறுநீரகம் வாங்கியுள்ளார்.
அதன்பின், தன்னைப் போல சிறுநீரகம் செயலிழந்தவருக்கு பணம் பெற்றுக்கொண்டு சிறுநீரகம் வாங்கித்தரும் தொழிலை செய்யத் தொடங்கினார்.
இதில் நல்ல வருமானம் கிடைத்ததால், தொடர்ந்து தொழிலை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.