

தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூடுகிறது. அப்போது வரும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, படுதோல்வியை சந்தித்தது. கட்சித் தலைவர் விஜயகாந்த்கூட வெற்றி பெறவில்லை. இதனால், தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இதற்கிடையே, கட்சியை பலப்படுத்த நிர்வாகிகள் மாற்றம், கூடுதல் மாவட்டச் செயலாளர்கள் நியமனம், தொண்டர்களை மாவட்ட வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கையில் விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்டங்கள் தோறும் சென்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் சந்தித்து குழு புகைப்படம் எடுத்து வருகிறார். “மாவட்ட நிர்வாகிகள் கிராமங்களுக்கே சென்று தொண்டர்களை சந்திக்க வேண்டும். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்” என விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகி வரும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு இருந்தார். இதற்கிடையே, தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், வரும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர். தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூடுகிறது. இதற்கான முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார்கள் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலும், அவர்கள் கூறியதாவது:
தேமுதிகவை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் கிராமங்கள்தோறும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்களில் இருக்கும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தலா 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். தற்போது எங்கள் கட்சியின் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் இதுவரையில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தலைவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்த கட்டமாக திருச்சி, தஞ்சாவூர், கடலூர், பெரம்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விரைவில் செல்லவுள்ளார்.
சுற்றுப் பயணங்களை தவிர்த்து மற்ற நாட்களில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.
இதற்கிடையே, வரும் உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத பதவிகளை கைப்பற்ற வேண்டும். இதற்கான முழு கட்சி பணிகளை நீங்கள் ஆற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேமுதிகவின் பொதுக்குழு கூடுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பொதுக்குழு உறுப்பினர் களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை வரும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.