

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தாய், சேய் மருத்துவக் கட்டிடம் (சீமாங் மருத்துவ நிலையம்) முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக திறப்புவிழா காணாமல் காத்திருக்கிறது. கோடை வெயிலில் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள், குழந்தைகள் போதிய படுக்கை வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு மதுரை மட்டு மின்றி, தென் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் நாளொன்றுக்கு 2,600 உள்நோயாளிகள், 9 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். மொத்தம் 45 சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன.
தினமும் 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் இங்கு நடக்கின்றன. 50 பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், மகப்பேறு சிகிச்சைப் பிரிவும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவும் போதிய அடிப்படை வசதியில்லாமல் மிகுந்த இடநெருக்கடியில் செயல் படுகின்றன.
இதற்காக ரூ.40 கோடியில் மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த தாய் சேய் மருத்துவச் சிகிச்சை மையம் (சீமாங் மையம்) கட்டப்பட்டு, திறப்புவிழாவுக்காக தயார் நிலையில் இருக்கிறது. ஆனால், திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வரும், சுகாதார அமைச்சரும் இன்னமும் ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். இதனால் கட்டி முடிக்கப்பட்டும் முதல்வரின் வருகைக்காக திறக்கப்படாமல் உள்ளது. தற்போது அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் வருகைக்கு ஏற்றார் போல் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் தவிக்கின்றனர்.
குறிப்பாக தாய், சேய் சிகிச்சை மையத்தில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் இல்லாமல் கோடை வெயிலில் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இடநெருக்கடி காரண மாக முழுமையான சிகிச்சை முடியும் முன்பே, வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சீமாங் மருத்துவ நிலையத்தில் ஒரே நாளில் 150 பிரசவங்களை கவனிக்கக்கூடிய அளவு வசதிகள் உள்ளன. 400 படுக்கை வசதிகள் உள்ளதால், இடநெருக்கடி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அனைத்து வார்டுகளும் ஏசி வசதியுடன் நவீனப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் இருக்கின்றன. மொத்தம் 6 மாடிகள் உள்ளன. 6-வது மாடியில் பச்சிளம் குழந்தை கள் சிகிச்சை பிரிவு செயல்பட உள்ளது.
மே முதல் வாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வரவுள்ளார். அப்போது, இந்தக் கட்டிடத்தை அவர் திறந்துவைக்க வாய்ப்புள்ளது. எனினும், அது வரை காத்திருக்காமல் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை மட்டும் ஏப்ரல் 15-ம் தேதி சீமாங் கட்டிடத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.