மத்திய அரசு மிரட்டுகிறது; தமிழக அரசு மிரள்கிறது: கோவையில் இரா.முத்தரசன் விமர்சனம்

மத்திய அரசு மிரட்டுகிறது; தமிழக அரசு மிரள்கிறது: கோவையில் இரா.முத்தரசன் விமர்சனம்
Updated on
1 min read

தமிழக அரசின் பலவீனத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானா லும் செய்யலாம் என மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசு மிரட்டுகிறது, தமிழக அரசு மிரள்கிறது என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான ஜீவா இல்லம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் ஜீவா இல்லத்தையும், மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் ஜீவா உருவச் சிலையையும் திறந்துவைத்தனர். பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீது அரசும், போலீஸாரும் தாக்குதல் நடத்து வது கண்டிக்கத்தக்கது. மாநில அரசில் உள்ளவர்கள் மக்களின் நலனில் அக்கறை காட்டாமல், பதவியை காத்துக்கொள்வதி லேயே கவனம் செலுத்துகிறார்கள்.

தமிழக அரசின் பணிகளை மத்திய அமைச்சர் ஆய்வு செய்வது என்பது இதுவரை தமிழகத்தில் நடக்காத சம்பவம்.

தமிழக அரசின் பலவீனத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசு மிரட்டுகிறது, தமிழக அரசு மிரள்கிறது. அதிமுக இரண்டாகப் பிரிவதும், மீண்டும் இணைவதும் முதல்வர் பழனிசாமியின் கையிலோ, ஓ.பன்னீர்செல்வத்தில் கையிலோ இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் கையில் இருக்கிறது.

தமிழக அரசு சட்டப்பேரவையை உடனே கூட்டி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு அஞ்சி நடுங்குகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதாக நேரடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அது அவரது விருப்பத்தைப் பொறுத்தது. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஊழல், முறைகேடுகள் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துகள் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in