

அரியலூரில் 2 குழந்தைத் தொழிலாளர்கள் உட்பட கொத்தடிமையாக நடத்தப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டனர்.
அரியலூர் ரயில் நிலையம் அருகே போலி முத்திரையுடன் பிவிசி குழாய் உபகரணங்கள் தயாரிக்கப்படுவதாக சார் ஆட்சியர் சந்திரசேகர சாகமூரிக்கு நேற்று முன்தினம் இரவு பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. உடனே அங்கு விரைந்த சார் ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அங்கு பணியாற்றி வந்த வடமாநிலத்தவர் சிலரிடம் சார் ஆட்சியர் விசாரித்தபோது, அவர்கள் திருச்சியைச் சேர்ந்த முகவர் வாயிலாக இங்கே கொத்தடிமைகளாக அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தீபக், ரஜீப், கபிசங்கர், தனில் ஆகிய 4 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் குழந்தைத் தொழிலாளர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டனர். இதைத் தொடர்ந்து 4 பேரும் வயது உறுதிபடுத்தும் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.