Published : 24 Feb 2014 09:30 AM
Last Updated : 24 Feb 2014 09:30 AM

தமிழகத்தில் 67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை நடந்த இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்னும் 2 நாட்களில் வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்தை சுகாதாரப் பணியாளர்கள் வழங்குவார்கள் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக 43,051 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை தவிர பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்காக பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் என 1,652 மையங்கள் மற்றும் தொலை தூரத்தில் உள்ள, எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடும் பணியில் சுகாதாரப் பணியாளர், தன்னார் வலர்கள் என சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த முகாமில் வீடுகளில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர் ஆர்வமாக தூக்கி வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளின் இடது சுண்டு விரலில் அடையாளத்துக்கு கருப்பு மை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 70.30 லட்சம் குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்தது. அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போட திட்டமிட்டு இருந்தோம். ஆனால், மாலை 5 மணி வரை 67 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு வீடுகளுக்கே சுகாதாரப் பணியாளர்கள் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x