

தமிழகத்தில் தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பிரவீண்குமார் இருந்து வருகிறார். 2010-ம் ஆண்டு ஜூலை இறுதியில், அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, இவரை தமிழகத்தின் 25-வது தலைமைத் தேர்தல் அதிகாரியாக மத்திய தேர்தல் ஆணையம் நியமித்தது.
கடந்த 2012-ம் ஆண்டின் இறுதியிலேயே தன்னை பதவியில் இருந்து விடுவிக்கும்படி, தலைமைத் தேர்தல் ஆணையத் திடம் பிரவீண்குமார் கேட்டிருந்தார். எனினும், சிறப்பாக பணிபுரிந்து வந்த அவரை விடுவிக்க தேர்தல் ஆணையம் விரும்பவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரவீண்குமார் மீது சில அரசியல் கட்சிகள் புகார் கூறின. எனினும், நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியின் சிறப்புப் பார்வையாளராக அவரை தேர்தல் ஆணையம் நியமித்தது.
தேர்தல் முடிந்தபிறகு, தன்னை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பிரவீண்குமார் மீண்டும் வலியுறுத்தி இருந் தார். இந்நிலையில் அவரை விடுவிப்பதற்கு தேர்தல் ஆணை யம் சமீபத்தில் ஒப்புதல் அளித் திருப்பது தெரியவந்துள்ளது. ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்குள் அவர் மாற்றப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பிரவீண்குமார் கூறும்போது, ‘‘என்னை இப்பதவியில் இருந்து விடுவிக்கும்படி தேர்தல் ஆணை யத்திடம் கேட்டுக்கொண்டேன். சமீபத்தில், அதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர். தமிழக அரசிடம் தகுதியுள்ள அதிகாரிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் விரைவில் கேட்டுப் பெறும். அதை பரிசீலித்து புதிய அதிகாரியை ஆணையம் நியமிக்கும்” என்றார்.
ஜெயலலிதா மீதான வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் கிடைக்காததால் ஸ்ரீரங்கம் தொகுதி பேரவை உறுப்பினர் பதவி காலியானது பற்றி சட்டப்பேரவைச் செயலகம் இதுவரை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் பிரவீண்குமார் தெரிவித்தார்.