கனமழை எதிரொலி: சென்னையில் தயார் நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்புக் குழு

கனமழை எதிரொலி: சென்னையில் தயார் நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்புக் குழு
Updated on
1 min read

சென்னையில் தொடரும் கனமழையின் எதிரொலியாக, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 6 குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 6 குழுவினரும் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 10 படகுகளும், மீனவளத்துறையின் 12 படகுகளும் மொத்தம் 22 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்பு காரணமாக சென்னையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பி.சந்திரமோகன் வெளியிட்ட தகவல்கள்:

சென்னை மாநகரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 முதல் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. அனைத்து சுரங்கப் பாதைகளிலும் நீர்தேங்காமல் இருக்க நீர் உறுஞ்சும் மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை. இதுவரை 44 மரங்கள் விழுந்துள்ளது. அதை உடனுக்குடன் அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கனமழை பெய்யும் நிலை ஏற்பட்டால் தாழ்வான பகுதியில் உள்ளவர்களை தங்க வைக்க 17 நிவாரண முகாம்கள் அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளது. அவர்களுக்கு உணவு தயாரிக்க அம்மா உணவகங்களில் மாநகராட்சிப் பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் ஆகியவை சார்பில் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றி சூப்பர் சக்கர் இயந்திரங்கள், லாரிகள், 112 பம்பு செட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 6 குழுவினரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் 6 குழுவினரும் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 10 படகுகளும், மீனவளத்துறையின் 12 படகுகளும் மொத்தம் 22 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் அதிகமாக தேங்கும் இடங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். நீர் அகற்றப்பட்ட பிறகே மின் இணைப்பு வழங்கிட மின்சார வாரியம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 196 இடங்களில் சிறிய அளவில் மழைநீர் தேங்கியிருந்தது. அதில் 110 நீர்த் தேக்கங்கள் அகற்றப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள நீர்த் தேக்கங்கள் ஓரிரு மணிகளில் சரிசெய்யப்படும்.

அனைத்து மண்டலங்களிலும் நடைபெறும் பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்களும் மாநகராட்சி அலுவலர்களும் ஒவ்வொரு மண்டலத்திலும் குழுக்கள் அமைத்து பணிகளைக் கண்காணித்து வருகின்றனர். மழை வெள்ளம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in