Published : 13 Jun 2017 04:13 PM
Last Updated : 13 Jun 2017 04:13 PM

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப் போராடுவோம்: திருமாவளவன்

நீட் நுழைவுத் தேர்வு, சமஸ்கிருத,இந்தித் திணிப்பு, உள்ளிட்ட மத்திய அரசின் தாக்குதல்களை எதிர்கொள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. நீதியின் பெயரால் இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிக்கு மத்திய மாநில அரசுகள் தலையிட்டுத் தீர்வு காணவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மருத்துவம், பொறியியல் முதலான தொழிற்கல்வி தொடர்பாக மட்டுமின்றி பொதுவாகவே கல்வி தொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து மக்கள் நலனுக்கு எதிரான தீர்ப்புகளையே வழங்கிவருகின்றன.

அவற்றுள் சில:

* தொழிற்படிப்புக்கு மாவட்ட ரீதியிலான இடஒதுக்கீடு ரத்து

* கிராமப்புற மாணவர்களுக்கு தரப்பட்டுவந்த இட ஒதுக்கீடு ரத்து

* உயர் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதும், அவற்றுக்கு தர நிர்ணயம் செய்வதும் மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு மட்டுமே உட்பட்டவை.மாநில அரசின் சட்டங்கள் அவற்றுக்குப் பொருந்தாது.

* உயர் கல்வியில் பங்களிப்பதற்கு தனியார் சுயநிதி நிறுவனங்களும் தேவை. அவை தொழிற்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான முதலீட்டிலிருந்து நியாயமான வருமானம் பெற உரிமையுண்டு.

* நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அரசின் பொதுத்தேர்வு அனுமதி முறைக்குள் கொண்டுவர முடியாது (ஒவ்வொரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் தன்னுடைய இடங்களைத் தானே நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பிக் கொள்ளலாம்.)

* அரசுக்கு மட்டும் கட்டாய இலவசப் பள்ளிக் கல்வியைக் கொடுக்கவேண்டிய முழு பொறுப்பும் கிடையாது.

* பள்ளிகளில் தமிழ் மட்டுமே பயிற்று மொழி என்று கட்டாயப்படுத்த முடியாது.

* கல்வி நிறுவனங்களில் கட்டாய நன்கொடை என்பது சட்டப்படி தவறுஎன்றாலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்களது ஆண்டுக் கல்விக் கட்டணங்களை எப்படி வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாம்.

இதுபோன்ற மக்கள் விரோதத் தீர்ப்புகளின் தொடர்ச்சியாகவே இப்போதைய நீட் தேர்வு தொடர்பான தீர்ப்பும் அமைந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று சொல்லிவிட்டு குஜராத் மாநிலத்துக்கு எளிமையான வினாக்களையும் தமிழ்நாட்டுக்குக் கடுமையான வினாக்களையும் கேட்பது என்ன நியாயம்? பிரதமர் பிறந்த மாநிலத்துக்கு ஒரு நீதி மற்ற மாநிலங்களுக்கு வேறொரு நீதியா?

கல்வி பொதுப் பட்டியலில் இருக்கும் வரை இப்படி அநீதி இழைக்கப்படுவதை சட்ட ரீதியாகத் தடுக்க முடியாது. அவசரநிலைக் காலத்தில் மாநிலங்களின் ஒப்புதலின்றி மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றினார்கள். அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதே சரியான தீர்வாக இருக்கும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதற்கும் ஒரே வரி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே அலுவல் மொழி என எல்லாவற்றையும் மிக வேகமாக மையப்படுத்தி வருகிறது. ஆட்சியாளர்களின் இந்த அதிகாரத்துவப் போக்கைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டியது நீதித்துறையின் கடமை. அந்தக் கடமையை அது செய்யத் தவறினால் மக்கள் மன்றம்தான் அந்தப் பொறுப்பை நிறைவேற்றவேண்டும்.

நீட் நுழைவுத் தேர்வு, சமஸ்கிருத ,இந்தித் திணிப்பு, உள்ளிட்ட மத்திய அரசின் தாக்குதல்களை எதிர்கொள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம். அதற்கு தமிழகத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைவோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x