Published : 02 Oct 2014 09:36 AM
Last Updated : 02 Oct 2014 09:36 AM

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: ஈரோடு காந்தி கோயிலில் கோலாகலம்

தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளில் மட்டும் ஆளுயர மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்து விட்டு, அடுத்த நாள் முதல் தலைவரையும், அவர்தம் கொள்கைகளையும் மறந்து விடும் சமுதாயத்தில், தேசப்பிதா காந்தியை கடவுளாக பாவித்து, அவருக்கு கோயில் கட்டியுள்ளார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வையாபுரி. காந்திஜெயந்தி மட்டுமல்லாமல் நாள்தோறும் மூன்று வேளையும் காந்திக்கு தவறாமல் பூஜை செய்து தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள செந்தாம் பாளை யத்தில் காந்தி கோயில் அமைந் துள்ளது. தேசப்பிதா மகாத்மா காந்தி அறக்கட்டளையின் தலைவரான வையாபுரி, 10 லட்ச ரூபாய் செலவில் இந்த கோயிலை நிர்மாணித்துள்ளார். கோயிலின் மூலவராக உள்ள காந்தி சிலைக்கு நாள்தோறும் மூன்று கால பூஜைகள் செய்ய தனி அர்ச்சகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி வந்துவிட்டால் திருவிழா கோலம் பூண்டு விடுகிறது செந்தாம்பாளையம். இன்று காலை காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்துக்காக கோயில் திருவிழா பாணியில் அழைப்பிதழ் அடித்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், அக்டோபர் 2-ம்தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை வாணி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பக்தியோடு தீர்த்தக்குடம் எடுத்து ஆற்றில் நீர் எடுத்து வந்து காந்தி மகானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யவுள்ளனர்.காந்தியின் மேல் மாறாத பற்று கொண்டுள்ள 86 வயதான வையாபுரி முதலியாரிடம் பேசியபோது, “உலகில் எத்தனை யோ பேர் தோன்றி, எத்தனையோ அரிய பெரிய செயல்களை செய்திருக்கிறார்கள். ஆனால், காந்தியைப் போல், தனக்கு என்றில்லாமல், பிறருடைய நன்மைக்கான செயல்களை ஆராய்ந்து தீர்மானித்து தர்மத்துக்கு உகந்த முறையில் நிறைவேற்றியவர் யாருமில்லை. கத்தியின்றி, ரத்தமின்றி இந்திய திருநாட்டின் விடுதலைப் போர் வெற்றி பெற அந்த மகாத்மாவின் அகிம்சையே, தார்மிக முறையே முக்கிய காரணம்.

எலும்பும், தசையுமான ஒரு மனிதன்தான் இத்தனையும் செய்தார் என உணரும் போது உண்டாகும் நம்பிக்கையும், ஊக்கமுமே நமக்கு கிடைத்த பேறு. எல்லோரும் சாலைகளில் சிலையாக அவரை பார்க்கின்றனர். நான் கோயிலில் வைத்து அவரை தெய்வமாக பார்க்கின்றேன்” என்ற உறுதியான குரல் கணீரிடுகிறது. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... வாரி, வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்... வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்...உறுதியோடு மெழுகுபோல ஒளியை வீசலாம்.... மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... தெய்வமாகலாம்.., என்ற வைர வரிகள் இதுபோன்ற மக்களின் மனதில் மரிக்காத தலைவர்களுக்கு செய்யப் படும் மரியாதையை உறுதிப்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x