நேற்றொரு தோற்றம்.. இன்றொரு மாற்றம்..: அடுத்த கட்டத்துக்கு தயாராகும் சசிகலா!

நேற்றொரு தோற்றம்.. இன்றொரு மாற்றம்..: அடுத்த கட்டத்துக்கு தயாராகும் சசிகலா!
Updated on
5 min read

அரசியல் தலைவர்களின் திடீர் மறைவு, கட்சிக்குள் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவது வழக்கம். ஜெயலலிதாவின் மறைவிலும் ஒருசில நாட்களுக்கு இந்த குழப்பங்களும் சலசலப்புகளும் காணப்பட்டன. ஆனாலும், மாற்றுக் கட்சியினரின் அரசியல்களுக்கு எந்தவிதத்திலும் வாய்ப்பு தந்துவிடாத வகையில், குறுகிய காலத்தில் குழப்பங்களில் இருந்து அதிமுக மீண்டிருப்பதாகவே தெரிகிறது. தலைவர் இருக்கும் காலத்திலேயே வாரிசு சுட்டப்படாத அதிமுக, இவ்வளவு விரைவில் சகஜ நிலைக்குத் திரும்பியது அரசியல் நோக்கர்களும் எதிர்பார்க்காத ஒன்று.

அங்கும் இங்குமாக சில எதிர்ப்புகள், அதிருப்திகள் காணப்பட்டாலும், ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

இடையிடையே சில மாதங்கள் தவிர, கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நிழலாக அவரது போயஸ் தோட்ட இல்லத்திலேயே வசித்து வந்தவர் சசிகலா. தலைமைச் செயலகம் தவிர ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவரது காரின் பின் இருக்கையில் சசிகலா கட்டாயம் இருப்பார். ஜெயலலிதாவுக்கு உணவு வழங்குதல், அவருக்கு தேவையான வற்றை எடுத்து கொடுத்தல், பிரச்சாரத் துக்கான உரைகளை எடுத்துக் கொடுத் தல் என எல்லாமே சசிகலாதான்.

கட்சி தலைமை அலுவலகத்தின் மாடத்தில் இருந்து இருவிரல் நீட்டுகிறார்.

33 ஆண்டுகளாக ஜெயலலிதாவை விட்டு நீங்காமல், அவரது நிழல்போல உடனிருந்த, பின்னால் இருந்த சசிகலா தற்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முன்னுக்கு, முகப்புக்கு வரத் தொடங்கியிருக்கிறார்.

ஜெயலலிதா பாணி

முதல்வராகவும், பொதுச் செயலாள ராகவும் ஜெயலலிதாவை பார்த்தவர்கள், அதே பாணியில் சிறிய மாற்றத்துடன் சசிகலாவை பார்க்க முடிகிறது. உடையைப் பொறுத்தவரை லேசான மாற்றங்களுடன், ஆனால் ஏறக்குறைய ஜெயலலிதா பாணியிலேயே வலம் வருகிறார். வழக்கம்போல, மென்மை யான நிறங்களிலான சேலைகளையே உடுத்துகிறார். அதே நிறத்தில் செருப்பு அணிகிறார். பொதுச் செயலாளரான பிறகு, அவரது சிகை அலங்காரம் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் சாதார ணமாக முடியைப் பின்னி சிறிய ஜடை போட்டிருந்த அவர், தற்போது ஜெயலலிதா பாணியில், வலையுடன் கூடிய கொண்டை போட்டிருக்கிறார். முகத்தில் மேக்கப் தனித்துவமாக தெரிகிறது. உடைக்கு ஏற்றபடி, கருப்பு, பழுப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரங்கள் அணிகிறார். வட்ட வடிவப் பொட்டுக்கு மேல் லட்சுமியை குறிக்கும் ‘ சூர்ணம்’ வைத்துள்ளார். கையெழுத்து நிபுணர்களின் ஆலோசனை பெற்று, எழுத்துக்களை கூம்பு வடிவத்தில் எழுதுவது, இறுதி எழுத்தை மேல் நோக்கி கொண்டு செல்வது என தமிழ், ஆங்கிலம் இரண் டிலும் கையெழுத்து போடுகிறார். ஜெய லலிதா வழக்கமாக பயன்படுத்தும் பேனா வகையையே இவரும் பயன் படுத்துகிறார். முதல்வராக இருந்த போது ஜெயலலிதா பயன்படுத்தும் ‘டொயோட்டோ லேண்ட் க்ரூசர் பிராடோ’ வாகனத்தையே சசிகலா தற்போது பயன்படுத்துகிறார். ஓட்டுநர்களும் பழைய ஆட்களே என்பதால், அவரது எண்ணமறிந்து செயல்படுகின்றனர்.

எங்கு சென்றாலும் வாகனத்தை விட்டு இறங்கி, தொண்டர்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறார். கட்சி அலுவலகத்தில், முதல் தளத்துக்குச் சென்று, முதலில் ஜெயலலிதா பாணியில் புன்முறுவல் பூத்து, எல்லா பக்கமும் திரும்பி வணக்கம் செலுத்து கிறார். இது முதல் நாள் கூட்டத்தில் நடந்த நிகழ்வு. அடுத்த நாள் கூட்டத் தில் வணக்கத்துடன், இரட்டை இலை காட்டுவதும் சேர்ந்தது. மூன்றாம் நாள் கூட்டத்தில், இரட்டை இலையுடன் ஜெயலலிதாவைப் போல் புன்னகை யுடன், கையை ஆட்டி தனது ஆதரவை தொண்டர்களுக்கு தெரிவித்தார். உள்ளே செல்லும்போதும், மீண்டும் போயஸ் தோட்டத்துக்குப் புறப்படும் போதும் இதை தவறாமல் கடைபிடிக்கிறார்.

காரில் இருந்தபடியே தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் வி.கே.சசிகலா.

வாகனத்தில் இருந்து இறங்கும் முன்னரும், ஏறி அமர்ந்த பின்னரும், புன்முறுவலுடன் வணக்கம் செலுத்து கிறார். ஜெயலலிதா போலவே, காரில் ஏறிய பிறகு நிர்வாகிகளை அழைத்துப் பேசுகிறார். ஜெயலலிதா இருந்தபோது, காரின் முன்பகுதியில், பறக்கும் குதிரை உருவம் இருக்கும். தற்போது அது இல்லை. அதற்குப் பதிலாக, கற்பக விநாயகர், நரசிம்மர், ஆஞ்சனேயர் படங்கள் உள்ளன. காரில் ஏறி அமர்ந்த தும் அந்த சாமி படங்களை வணங்கிய பின்னரே பயணத்தை தொடங்குகிறார்.

நிர்வாகிகளுடன் சந்திப்பு

சசிகலா பொதுச் செயலாளரான பிறகுதான் கட்சியின் அடுத்தகட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்திக்கிறார். ஆனபோதிலும், அவர் தங்களுக்கு உரிய மரியாதை அளித்து தங்களுடன் சகஜமாக உரையாடுவதாகவும், சொல்ல வரும் தகவல்களைப் புரிந்து கொண்டு உரிய ஆலோசனைகள் வழங்கு வதாகவும் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எத்தனையோ தடவை சசிகலாவைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவரது குரலைக் கேட்டது, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் தான். அதுவரை அவர் பொதுவெளியில் உரையாற்றியதில்லை. ‘தலைமைக் கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே’ எனத் தொடங்கிய அவரது உரையில் ‘ஜெயலலிதா போலவே ராணுவக் கட்டுப்பாட்டுடன் அதிமுகவை நடத்து வேன்’ என்றும் உறுதியோடு தெரி வித்தார். ‘கனி தெரியும், காய் தெரியும், வேர் தெரியாது’ என்றும் பேச்சில் அவர் குறிப்பிட்டார். ‘அதிமுகவின் வளர்ச்சியில், வெளியே தெரியாத வேராக நான் இருந்தேன்’ என்பதையே சசிகலா கோடிட்டுக் காட்டுகிறார். ‘ஜெய லலிதாவிடம் காட்டிய மரியாதையை என்னிடமும் காட்ட வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பும் அவரது நடவடிக்கையில் வெளிப்படுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.

கெடுபிடியற்ற போயஸ் தோட்டம்

ஜெயலலிதா இருந்தபோது, அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் 240 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு உதவி ஆணையர் தலைமையில் 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், இந்த பாதுகாப்புகள் தொடர்ந்ததற்கு எதிர்ப்பு வலுத்ததால் அங்கு போலீ ஸார் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப் பட்டது. பழைய கெடுபிடிகளும் தற்போது இல்லை. ‘லிங்க்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபாரி உடை அணிந்த இவர்கள் சுமார் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போயஸ் தோட்டம் பகுதியில் 5 இடங்களில் நின்றுகொண்டு, அங்கு வருபவர்களைக் கண்காணிக்கின்றனர். மேலும், சசிகலா செல்லும் இடங்களுக்கு எல்லாம் முன்னும் பின்னும் காரில் இவர்கள் செல்கின்றனர். மேலும், சசிகலாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அவரது உறவினர்கள் சிலர் எப்போதும் அவர் கூடவே உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தனியார் காவலர்கள்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வரும்போது மட்டும் அவ்வை சண்முகம் சாலையில் 10 மீட்டருக்கு ஒரு போலீஸார் வீதம் நிற்கின்றனர். மேலும், நுழைவுவாயிலில் சுமார் 15 போலீஸார் பாதுகாப்புக்கு நிற்கின்ற னர். தொண்டர்கள் அதிகம் கூடும் நேரங்களில் போலீஸார் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தலைமை அலு வலகத்தில் தொண்டர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் இவர்கள் அனுமதி யின்றி செல்ல முடியாது. இவர்களில் பெரும்பாலானோர் டெல்டா மாவட்டத் தினர் என்கின்றனர் சக போலீஸார்.

இடமாற்றம் வாங்கும் உறவினர்கள்

சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி வந்த சில நாட்களிலேயே, தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக ஜெயச் சந்திரன் நியமிக்கப்பட்டார். சசிகலாவின் நெருங்கிய உறவினராக இவர், திரு நெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இதுபோல, சசிகலா உறவினர்கள் பலர் காவல் துறையில் இடமாற்றம் வாங்கியுள்ளனர்.

நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு செலவுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.

அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக் கள், நிர்வாகிகள் அனைவரும் மறுபேச்சில்லாமல் சசிகலாவை ஏற்றுக் கொண்டிருப்பதாகவே தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன. ஆனாலும், கிளை கமிட்டி நிர்வாகிகள், அடிமட்டத் தொண்டர்கள், பரவலாக மகளிர் தொண்டர்கள் மத்தியில் இந்த அளவுக்கு முழு ஆதரவு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பல்வேறு கருத்துக்கணிப்புகளும் இதை உறுதி செய்கின்றன. இதை சசிகலாவும் அறியாமல் இல்லை. டிசம்பர் 29-ம் தேதிக்குப் பிறகு பொது நிகழ்வில் அவர் பேசவில்லை. ஆனால், ஜனவரி 4-ம் தேதிமுதல், மாவட்டவாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களிடம் பேசி வருகிறார். ‘தொண்டர்களை ஒருங் கிணைக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறவேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண் டாட வேண்டும்’ என்பதை ஒவ்வொரு சந்திப்பிலும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

ஒருபுறம் கட்சி அலுவலகத்தில் நிர் வாகிகளிடம் கலந்துரையாடும் அவர், போயஸ் தோட்ட இல்லத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையினர் என பல்வேறு துறை பிரபலங்களை நாள்தோறும் சந்தித்து வருகிறார். சந்திப்பவர்களிடம் எல்லாம் ‘உங்களுக்காக நான் இருக்கிறேன். எனக்கு பக்கபலமாக நீங்கள் இருங்கள்’ என்பதை வலியுறுத்துவது போலவே சசிகலா பேசுவதாக கூறுகின்றனர்.

எதிர்ப்புகளைச் சமாளிப்பதிலும் அவர் தனக்கென தனி பாணியை பின்பற்றி வருகிறார். சமீபத்தில் திசை மாறிச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப் பட்ட அக்கட்சியின் செய்தி தொடர் பாளர் நாஞ்சில் சம்பத்தை மீண்டும் அழைத்து பேசி, அவரை கட்சியில் தொடரச் செய்துள்ளார். இதுபோல, அதிருப்தியில் இருக்கும் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளையும் அரவணைத் துச் சென்று, கட்சியில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், அதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறவும் சசிகலா விரும்புகிறார்.

அதிமுக தலைமை அலுவலகம் அருகே பாதுகாப்புக்காக வரிசைகட்டி நிறுத்தப்பட்டிருக்கும் போலீஸார்.

கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகி களின் ஆதரவுடன் அதிமுக பொதுச் செயலாளராகிவிட்டார் சசிகலா. அடுத்து, தமிழகத்தின் முதல்வர் இருக்கை யிலும் அவரை அமர்த்திப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல், அக்கட்சி யினர், முக்கியமாக மேல்மட்டத் தலைவர் கள், மூத்த நிர்வாகிகள் மத்தியில் காணப்படுகிறது. அவர் வெகு விரைவில் அடுத்தகட்டத்துக்கு வருவார் என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர் நிர்வாகிகள்.

படங்கள்: க.ஸ்ரீபரத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in