

சொத்து வரி வசூலிப்பதில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை ரூ.350 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்கள், 6 மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரி செலுத்த வேண்டும். நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் வரியை செலுத்தி வருகின்றனர்.
மேலும் சிட்டி யூனியன், இந்தியன் ஓவர்சீஸ், தமிழ்நாடு மெர்க்கண்டைல், கரூர் வைஸ்யா உள்ளிட்ட வங்கிகளின் 350-க்கும் மேற்பட்ட கிளைகள் மூலமும் சொத்துவரியை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012-13ம் நிதியாண்டில் 10 லட்சத்து 82 ஆயிரத்து 77 பேரிடம் இருந்து ரூ.461.09 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டது. 2013-14ம் நிதியாண்டில் சொத்துவரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 5 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி 809.61 கோடி ரூபாய். இதில் 550 கோடி ரூபாயை இலக்காகக் கொண்டு அதை வசூலிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதுவரை ரூ.350 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதி நாளான வரும் 31-ம் தேதிக்குள் இலக்குத் தொகையை முழுமையாக வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.நீண்ட கால மாக சொத்து வரி பாக்கி மற்றும் அதிக சொத்துவரி பாக்கி வைத்திருப்பவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகைகளை வைத் தும் பணத்தை வசூலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.