

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் இருப்பு மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது. மொத்தமுள்ள 11 அணைகளிலும் 3.8 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 27 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.
மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 11 அணைகளின் மொத்த தண்ணீர் கொள்ளளவு 13,765.5 மில்லியன் கனஅடியாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 3,723.5 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஆனால், தற்போது 526.34 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
மொத்தமாக அணைகளில் கடந்த ஆண்டு இதே காலத்தில் 27 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. தற்போது 3.8 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
நேற்றைய நீர்மட்டம்
அணைகளில் நேற்றைய நீர்மட்டம் (அடைப்புக்குள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம் விவரம்)
பாபநாசம்- 19.10 அடி (61.60 அடி), சேர்வலாறு- 16.4 அடி ( 74.61 அடி), மணிமுத்தாறு- 36.50(77.97), கடனா- 45.8 (28.90), ராமநதி- 28.75 (25), கருப்பாநதி- 31.89 (24.94), குண்டாறு- 22.12 (11.80 ), அடவிநயினார்- 30.25 (41.50), வடக்குபச்சையாறு- 3.25 (24.10), கொடுமுடியாறு- 2 (2.50), நம்பியாறு- 7.28 (12.89).
மழை அளவு
திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான மழை அளவு 814.80 மி.மீ. கடந்த 2015-ம் ஆண்டில் 1,421.07 மி.மீ. மழை பெறப்பட்டிருந்தது. இது இயல்பான மழையளவைவிட 74.4 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2016-ம் ஆண்டில் 396.88 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டிருந்தது. இது இயல்பைவிட 51.3 சதவீதம் குறைவு.
திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான வடகிழக்கு பருவமழை 485.8 மிமீ. கடந்த ஆண்டு இப்பருவத்தில் 182.7 மி.மீ. மழை பெறப்பட்டிருந்தது. இது இயல்பான அளவைவிட 62.19 சதவீதம் குறைவாகும்.
மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் இயல்பான மழையளவு 41.3 மி.மீ.. ஆனால் 58.69 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ஏப்ரல் மாத இயல்பான மழையளவு 59.8 மி.மீ., இதுவரை 15.52 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டிருந்தது. மே மாத இயல்பான மழையளவு 38 மி.மீ. நேற்றுவரை 79.95 மி.மீ. கிடைக்கப்பெற்றுள்ளது. மே மாதம் முடிய 5 மாதங்களில் இயல்பான மழையளவு 219.5 மி.மீ.. இதுவரை 234.87 மி.மீ. மழை பெறப்பட்டிருக்கிறது. இது இயல்பான மழையளவைவிட 15.37 மி.மீ. அதிகமாகும்.
குளங்களின் நிலைமை
மாவட்டத்தில் 1,221 கால்வரத்து குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. இவற்றில் 1,201 கால்வரத்து குளங்களும், 1,297 மானாவாரி குளங்களுமாக மொத்தம் 2,498 குளங்கள் வறண்டிருக்கின்றன. பெரும்பாலான கிணறுகள் வறண்டுள்ள நிலையில் ஒருசில வட்டாரங்களிலுள்ள கிணறுகளில் சராசரியாக 1 மணி முதல் 2 மணிநேரம் பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் வறண்டிருக்கின்றன. தற்போதைய கோடை விடுமுறையில் குற்றாலத்துக்கு வருவோருக்கு இது ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.