Published : 03 Nov 2013 11:55 AM
Last Updated : 03 Nov 2013 11:55 AM

இலங்கை மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?- ராமதாஸ்

இசைப்பிரியா படுகொலை குறித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்தை மேற்கோள் காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "இலங்கை மீது நேரடியாகவோ அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மூலமாகவோ நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்குவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "விடுதலைப்புலிகள் இயக்கத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்த காணொலி காட்சியை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சத்தை பிளக்கும் வகையிலும், இதயத்தை உலுக்கும் வகையிலும் உள்ளன.

சகதி நிறைந்த குளத்தில் கிடக்கும் இசைப்பிரியாவை சிங்களப் படையினர் அழைத்து வருகின்றனர். அவர் மீது ஒரு வீரர் வெள்ளைத் துணியை போர்த்துகிறார். அப்போது, அவர் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் என்று சில வீரர்கள் கூற, அதை இசைப்பிரியா மறுக்கிறார். அடுத்த காட்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் பள்ளம் ஒன்றில் அவர் உயிரிழந்து கிடக்கிறார்.

ஏற்கனவே இசைப்பிரியா போரின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்திருந்தது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள காணொலி காட்சிகளைப் பார்க்கும்போது இசைப்பிரியாவை சிங்களப் படையினர் பிடித்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாக்கிய பிறகு படுகொலை செய்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.

இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்பதற்கும், அங்கு போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் நடத்தப்பட்டன என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர், ''இது மிகவும் கொடூரமானது. மனித உரிமையை மீறிய செயல். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை பல நாடுகள் கண்டித்த பிறகும், அது தனது தவறுகளை திருத்திக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.

இவ்வளவுக்குப் பிறகும் இலங்கை மீது நேரடியாகவோ அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மூலமாகவோ நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்குவது ஏன்?

இனியும் தாமதிக்காமல் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை ரத்து செய்யவும், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தவும் முன்முயற்சி எடுக்க வேண்டும். இதற்கானத் தீர்மானத்தை ஜெனிவாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணையத்தின் 25-வது கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x