

ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தருமாறு தங்கள் எம்எல்ஏவை அந்தந்த தொகுதி இளைஞர்கள் போனில் கெஞ்சுகிறார்கள். இவ்வாறு சங்ககிரி எம்எல்ஏவிடம் கெஞ்சிய இளைஞர், எம்எல்ஏவால் மிரட்டப் பட்டதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியுள்ளது.
அடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வமா? சசிகலாவா என்ற பரபரப்பான சூழலில், சமூக வலை தளங்களில் ஒரு வேண்டுகோள் வேகமாகப் பரவி வருகிறது. “நாம் எல்லாரும் இப்படிப் புலம்பிக் கொண்டிருப்பதை விட, நாம் ஓட்டுப்போட்டு தேர்வு செய்த நமது எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு, சசிகலாவை எக்காரணம் கொண்டும் ஆதரிக்காதீர்கள். ஓ.பி.எஸ்.ஐ ஆதரியுங்கள் என்று கேட்போம். தொகுதி மக்களாகிய நமக்கு இதற்கு உரிமை இருக்கிறது” என்பது போன்ற தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. அனைத்து தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவையும் பகிரப்படுகின்றன.
இதன் அடிப்படையில், விடுதி களில் தங்கவைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஏராளமான செல்போன் அழைப்பு கள் வந்த வண்ணம் உள்ளன. அடிக்கடி அழைப்புகள் வந்ததால், பல எம்எல்ஏக்கள் கடுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக சேலம் மாவட்டம், சங்ககிரி எம்எல்ஏவான எஸ்.ராஜாவைத் தொடர்பு கொண்ட, இளைஞர் ஒருவர் ஓ.பி.எஸ். பற்றிய பேச்சை எடுக்கும் முன்பே வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டதாக தெரிகிறது.
உரையாடல் விவரம்
இளைஞர்: சங்ககிரி எம்எல்ஏ ராஜா ஐய்யாங்களா?
எம்.எல்.ஏ: நீங்க யாரு?
இளைஞர்: சங்ககிரியில இருந்து பேசுறேங்க.
எம்.எல்.ஏ: சங்ககிரியில எந்த ஏரியா, சொல்லு, அந்த ஏரியாவுல யார் பக்கத்துல இருக்காங்களோ அவங்கள நான் பேசச் சொல்றேன்.
இளைஞர்: (பயந்துபோய்) சங்கிரியில.. சங்ககிரி தொகுதி தாங்க நானு.
எம்.எல்.ஏ: ஏய், சங்கிரி தொகுதியில எந்த இடத்துல? இந்த நம்பரை போலீஸ்கிட்ட கொடுத்து 10 நாள் கழிச்சி மிதிச்சிப்புடுவேன்.
இளைஞர்: அய்யா நான் தப்பாப் பேச எதுக்கும் கூப்பிடலைய்யா. சரிங்கய்யா விடுங்கய்யா.
எம்.எல்.ஏ: இந்த நம்பர் பதி வாகிப்போச்சு. மிதிச்சி மிதிச்சி மிதிச்சிப்புடுவேன். வைடா போனை.
இதைத் தொடர்ந்து மிரட்சியுடன் போனை துண்டிக்கிறார் அந்த இளைஞர். இளைஞர்கள் பலர் இவ்வாறு பல எம்எல்ஏக்களால் மிரட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிலர் அதை பகிரங்கப்படுத்தி, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்று சமூக வலைதளங்கள் வாயிலாக கேள்வி கேட்கிறார்கள். அதேநேரம், சிலரோ, “ஏன் 10 நாள் கழிச்சி மிதிக்கிறேன்”னு சொன்னாரு? என்பதைச் சொல்லி சமூக வலை தளங்களில் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.