

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2 வது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும் பங்கை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய - ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியால் தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், ராதாபுரம் தாலுக்காவில், கூடங்குளம் கடலோரப் பகுதியில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டில், ஜூலை மாதத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் முதல் அணு உலை மின் உற்பத்தியை தொடங்கியது. அதன் அடிப்படையில் அங்கு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அதிலிருந்து தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 வது அணு உலைக்கான அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அணுமின் நிலைய நிர்வாகம் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதியைப் பெற்று, 2 வது அணு உலையை இயக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் இந்த அணு உலையில் நேற்று இரவு முதல் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சில மாதங்கள் சென்ற பிறகு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் உற்பத்தி 1000 மெகாவாட் அளவினை எட்டும்போது தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தற்போது தமிழகத்தின் பயன்பாட்டிற்கு போதிய மின்சாரம் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 வது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும் பங்கினை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
அதே நேரத்தில் அணுமின் நிலையம் அமைந்திருக்கும் அப்பகுதி வாழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தினை தீர்க்கும் வகையில், சுற்றுச் சூழல் பாதிக்காமல், பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்'' என்று வாசன் கூறியுள்ளார்.