

'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மக்களிடையே கவனம் ஈர்த்த கோவனின் பிரச்சாரப் பாடல்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அத்துடன், அவருக்கு ஆதரவான பதிவுகளும் கொட்டப்பட்டவண்ணம் உள்ளன.
கோவன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி (வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய கிரைம் பிராஞ்சு வட்டாரம் தெரிவிக்கின்றது.
வினவில் பதிவேற்றம்:
கோவன் மீதான நடவடிக்கை குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "கோவன் இசையமைத்து பாடி உருவாக்கிய 'மூடு டாஸ்மாக்கை மூடு' பாடல் உட்பட பல்வேறு பாடல்களையும் 'வினவு' அதன் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அந்தப் பாடல்களில் பெரும்பாலனவை அரசு அமைப்புகளுக்கு எதிரானவையாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப்பாடலில் ஜெயலலிதா போல் வேடமணிந்த ஒருவர் மதுவை பாட்டிலில் இருந்து கோப்பையில் ஊற்றுவது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மது விழிப்புணர்வு, குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள தனி மனித சுதந்திரம் நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அத்தகைய விமர்சனங்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. சைபர் கிரைம் அதிகாரிகளில் ஒருவர் இந்தப் பாடலை இணையத்தில் கவனித்தார். அதன் அடிப்படையிலேயே கோவனை திருச்சியில் கைது செய்தோம். முதலில் அவர் ஒத்துழைக்கவில்லை. ஒருவழியாக நிலைமையை சமாளித்து அவரை கைது செய்தோம்" என்றார்.
கைது நடவடிக்கை குறித்து மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏ.சரவணன் கூறும்போது, "கோவன் கைது செய்யப்பட்டது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல்" என்றார்.
கோவனின் மகன் சாருவாஹன், "என் தந்தையின் கைது மக்கள் கலை, இலக்கிய கழகத்தை மிரட்டும் செயல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிரட்டும் செயல். இருப்பினும், மக்கள் கலை, இலக்கிய கழகம் தொடர்ந்து தனது பிரச்சாரங்களை மேற்கொள்ளும்" எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, மூடு டாஸ்மாக்கை மூடு (shut down tasmac) என்ற பாடலுடன், கோவனின் பிரச்சாரப் பாடல்கள் பலவும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.
கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு கருணாநிதி, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:
திமுக தலைவர் கருணாநிதி:
"கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜனநாயகத்தின் குரல்வளை இந்த ஆட்சியில் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. கோவன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்." | முழுமையான செய்தி ->பாடகர் கோவனை விடுதலை செய்ய கருணாநிதி வலியுறுத்தல் |
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
"டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது. இதுபோன்று மக்கள் விழிப்புணர்வுக்காகவும், நன்மைக்காகவும் செய்யப்படும் செயல்களை, அதிமுக அரசு பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் முடக்காமல், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழக அரசுக்கு மதுவை விற்பதற்கு எப்படி உரிமை உள்ளதோ, அதுபோல மதுவை வேண்டாம் என்று சொல்வதற்கு தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.'' | முழுமையான செய்தி ->கோவனை உடனடியாக விடுதலை செய்க: விஜயகாந்த் |
பாமக தலைவர் ராமதாஸ்:
''தமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் மிகப்பெரிய சீர்கேடாக மது உருவெடுத்திருக்கிறது. மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதைத் தான் கோவன் அவரது பாடலில் விவரித்திருக்கிறார்.
கோவனின் பாடலில் உள்ள சில ரசனைக் குறைவான வார்த்தைகளை ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் மதுவால் தமிழ்நாட்டில் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் பாடல்களில் இடம் பெற்றுள்ள கருத்துகள் உண்மையானவை. இந்த உண்மையை கூறியதற்காக ஒருவர் மீது தேசத் துரோக வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது.
அடுத்தகட்டமாக கோவனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இது மனிதத் தன்மையற்ற செயலாகும். மது விற்பனையையே கடமையாகக் கொண்ட ஆட்சியாளர்களிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது." | முழுமையான செய்தி ->கோவன் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் |
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்:
"மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை பாவலர் வரதராஜன் எப்படி பாடி நாட்டு மக்களை ஈர்த்தாரோ, அதற்கு சற்றும் குறையாமல் மக்கள் உணர்ச்சிகளை தூண்டுகிற வகையில் பொது பிரச்சினைகளை முன்வைத்து பாடல்களை இயற்றி, அவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே பேரெழுச்சி ஏற்படுத்தியதை சகிக்க முடியாதவர்கள் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டிலே தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதை உறுதி செய்கிற வகையில்தான் கிராமிய பாடகர் கோவன் கைது நிகழ்ந்துள்ளது." | முழுமையான செய்தி - >கோவன் கைதை கண்டித்து நவ.2-ல் ஆர்ப்பாட்டம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் |
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
"மதுவின் தீமை பற்றி நாட்டுப்புறப் பாடல் மூலம் எடுத்துக் கூறியதற்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி தேசத் துரோகம், சமூகத்தில் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்படுத்துதல், அவதூறு செய்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கைகளால் மது ஒழிப்புப் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று ஜெயலலிதா அரசு நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. பாடகர் கோவன் கைது, மதுவிலக்குப் போராட்டத்தை இன்னும் பன் மடங்கு வீரியத்துடன் மக்கள் முன்னெடுத்துச் செல்லவே வழி வகுத்து இருக்கின்றது." | முழுமையான செய்தி ->கோவன் மீதான நடவடிக்கையால் மதுவிலக்குப் போராட்டம் வலுக்கும்: வைகோ |
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்:
"மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடுவோர் மீது அதிமுக அரசு இப்படி அடுத்தடுத்து அடக்குமுறையை ஏவி விடுகிறது. அதிமுக படை போல் காவல்துறை செயல்படுவதும், மனித உரிமைகள் இப்படி கொடுங்கரத்தால் நசுக்கப்படுவதையும் பார்த்தால் ஏதோ நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது.
கோவனின் கைதுக்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அதிமுக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தின் முன்பு சட்டத்தின் ஆட்சியும், கருத்து சுதந்திரம் அளித்துள்ள அரசியல் சட்டமும் தலைகுனிந்து நிற்கின்றனவே என்று வேதனைப்படுகிறேன்.'' | முழுமையான செய்தி ->கோவன் கைது: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் |
சமூக வலைதளங்களில் கண்டனப் பதிவுகள்:
கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கான கண்டனப் பதிவுகளை நெட்டிசன்கள் பதிவு செய்தவண்ணம் உள்ளனர். நேற்று காலை தொடங்கி அவ்வப்போது Kovan என்ற பெயர், ட்விட்டரில் தேச அளவில் ட்ரெண்டிங்கிலும் வலம் வந்தன.
கடந்த 15 ஆண்டுகளில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தமிழகத்தில் பல்வேறு பிரபல அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அரசியல் சார்புடையவை. பல வழக்குகள் நிலுவையில் இருப்பது நினைவுகூரத்தக்கது.
அதேநேரத்தில், அந்தக் குறிப்பிட்ட பிரச்சாரப் பாடலில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சித்து பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன என்றும், அவர் மீதான நடவடிக்கை சரியே என்றும் அதிமுக ஆதரவு தரப்பினர் தங்கள் பக்கங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.