

ஐடி ஊழியர்களுக்கு உதவுகிற வகையிலான ‘உங்கள் அஞ்சல் பெட்டி’ திட்டத்தை இந்திய அஞ்சல் துறை நேற்று அறிமுகப்படுத்தியது.
இந்திய அஞ்சல் துறை மற்றும் நாஸ்காம் இணைந்து ‘உங்கள் அஞ்சல் பெட்டி’ என்னும் திட்டத்தை தரமணி ராமானுஜன் ஐடி பூங்காவில் நேற்று அறிமுகப்படுத்தின. ஐடி ஊழியர்கள் தங்களுக்கென்று தனியாக அஞ்சல் பெட்டிகளை வைத்துக்கொள்ளும் இத்திட்டத்தை சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் மற்றும் நாஸ்காம் மண்டலத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின்போது ஐடி ஊழியர்கள் 5 பேருக்கு பிரத்யேக அஞ்சல் பெட்டிக்கான சாவி வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின்போது ‘உங்கள் அஞ்சல் பெட்டி’ திட்டம் குறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:
அஞ்சல் நிலையங்களில் சொந்தமாக அஞ்சல் பெட்டிகளை வைத்துக்கொள்ளும் வசதி பல ஆண்டுகளாக உள்ளது. எனினும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், ஐடி ஊழியர்களுக்கு தற்போது வழங்குகிறோம். ஐடி ஊழியர்கள் மட்டுமன்றி பிறரும் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதன்படி, ஒரு நபர் அஞ்சல் நிலையங்களில் தனக்கான அஞ்சல் பெட்டிகளை வாங்கிக்கொள்ளலாம். இதற்கு ஆண்டுக் கட்டணம் ரூ.150 ஆகும். அஞ்சல் பெட்டியை வாங்கும்போது அதற்கான அடையாள எண் மற்றும் சாவிகள் வழங்கப்படும். அஞ்சல் பெட்டிகளை வாங்குவோர் 2 நாளைக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை என அஞ்சல் நிலையத்துக்கு சென்று தங்களுக்கான பெட்டிகளை சோதித்துக்கொள்ளலாம்.
இந்த பெட்டிகளுக்கு கடிதம் அனுப்ப முகவரி எதுவும் தேவை யில்லை. அஞ்சல் பெட்டி எண் மற்றும் அஞ்சல் முகவரி எண் இருந்தால் போதும். பெரிய பார்சல்கள் வரும்போது, அது தொடர்பான விவரத்தை சிறு காகிதத்தில் எழுதி அஞ்சல் துறையே சம்பந்தப்பட்ட நபருக்கான அஞ்சல் பெட்டியில் போட்டுவிடும். பார்சல் அஞ்சல் நிலையத்தில் பத்திரமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.